ஒற்றை யானை மீண்டும் அட்டகாசம்

குடியாத்தம் அருகே ஒற்றை யானை மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபட்டது. அப்போது பயிர்கள் மற்றும் டிராக்டரை சேதப்படுத்தியதுடன், பொதுமக்களையும் விரட்டியது.

Update: 2023-08-30 17:53 GMT

ஒற்றை யானை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமப் பகுதிகளுக்குள் அடிக்கடி யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக யானைகள் விளைநிலங்களுக்குள் வராமல் இருந்தது. மீண்டும் கடந்த 2 நாட்களாக குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கதிர்குளம் பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வந்தது.

கல்லப்பாடி கதிர்குளம் கிராமத்தில் 200-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில் கதிர்குளம் கிராமத்தை ஒட்டியபடி உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த ஒற்றை யானை முனிராஜ் என்பவருக்கு சொந்தமான தக்காளி மற்றும் வேர்க்கடலை பயிர்களையும், பாலாஜி என்பவருடைய நெற்பயிர் மற்றும் நிலத்தில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த டிராக்டரையும் சேதப்படுத்தி உள்ளது.

பொதுமக்களை விரட்டியது

தொடர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி, கவுரி ஆகியோருக்கு சொந்தமான நெல் மற்றும் மாமரங்கள் மற்றும் நிலத்தில் உள்ள பைப்புகளை சேதப்படுத்தி உள்ளது. விவசாயிகள் ஒன்று திரண்டு பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட முயன்ற போது, கிராம மக்களை யானை துரத்தி உள்ளது.

இதனால் கிராம மக்கள் உயிர் பிழைக்க தப்பி ஓடி வீடுகளுக்குள் புகுந்தனர். சிறிது நேரத்திற்கு பின் அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

இழப்பீடு வழங்க கோரிக்கை

கடன் வாங்கி விவசாயம் செய்துள்ள நிலையில், யானைகள் மற்றும் வனவிலங்குகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்துவதால் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வனத்துறையினர் உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே வேளையில் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தும் உரிய நேரத்திற்கு வனத்துறையினர் வரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ரோந்து பணி

காட்பாடி அடுத்த தமிழக எல்லையை ஒட்டியபடி உள்ள குடிபாலா பகுதியில் உள்ள ராமாபுரம் கிராமத்தில் நேற்று காலை தக்காளி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கணவன், மனைவியை காட்டு யானை மிதித்துக்கொன்றது. ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனவர்கள் மாசிலாமணி, நேதாஜி, சதீஷ்குமார் உள்பட வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் என பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள கொட்டாளம், சைனகுண்டா பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்