நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தல்

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-06-06 22:37 GMT

நெல்லை:

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராமமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறைதீர்க்கும் நாள்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் முன்னிலை வகித்தார்.

நெல்லை அருகே உள்ள ஆரோக்கியபுரம் கிராமமக்கள் தங்கள் ஊரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலிக்குடங்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் கொடுத்த மனுவில், நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை 38-வது வார்டில் அமைந்துள்ளது ஆரோக்கியநாதபுரம். இங்கு 2500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் சரிவர வருவதில்லை. எங்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரியுள்ளனர்.

நாங்குநேரி அருகே உள்ள கூந்தன்குளம் சிலையம் பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். இவர் நேற்று நெற்பயிருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, விவசாயம் செய்து நெற்பயிரை காப்பாற்ற தனது ஆழ்துளை கிணற்றிற்கு உடனே மின் இணைப்பு வழங்க வேண்டும், என்று கோரி மனு கொடுத்தார்.

தூக்குக்கயிறு

பணிநீக்கம் செய்யப்பட்ட மானூர் யூனியனுக்கு உட்பட்ட ஒரு பஞ்சாயத்தை சேர்ந்த கிராம ஊராட்சி செயலாளர் யாக்கோபு என்பவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தனக்கு உடனே பணி வழங்க வேண்டும். இல்லையெனில் தன்னை கலெக்டர் தூக்கில் போட்டு கொள்ள வேண்டும், என்று கூறி தூக்குக்கயிற்றுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூக்குக்கயிற்றுடன் கலெக்டர் அலுவலக வாசலில் நின்ற அவரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கலெக்டரிடம் மனு கொடுக்க செய்தார். அப்போது யாக்கோபு சாலையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொடுத்த மனுவில், நெல்லை சிந்துபூந்துறை சிவன் கோவில் அறநிலையத்துறைக்கு உட்பட்டதாகும். இந்த கோவில் கடைகளை முறையாக ஏலம் விட வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும், என்று கூறியுள்ளனர்.

சிவசேனா கட்சியினர்

சிவசேனா கட்சியினர் நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன், தென் மண்டல தலைவர் ராஜபாண்டியன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நெல்லையை சேர்ந்த ஒரு நபர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உள்ள உயர் அதிகாரிகள் எனக்கு நன்கு பழக்கமானவர்கள் என்று கூறி பலருக்கு வீடு வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பணத்தை மீட்டு தரவேண்டும். சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.

நாங்குநேரி அருகே உள்ள பருத்திப்பாடு கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, தங்கள் ஊரில் கோவில் இருக்கின்ற இடத்தை போலியாக ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அந்த பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும், என்று கூறி மனு கொடுத்தனர்.

முற்றுகை போராட்டம்

மக்கள் தேசம் கட்சியினர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பிரைட் ராமச்சந்திரன், மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் வேதமணி ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கல்லிடைக்குறிச்சி பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கட்சியின் இளைஞரணி செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்ததையும், தலைவரை அந்த வழக்கில் சேர்க்க போலீசார் முயற்சி செய்வதையும் கண்டித்து கோஷங்கள் போட்டனர். பின்னர் இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்

கிராமமக்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தல்

அம்பை அருகே உள்ள இடைகால் அணைந்தநாடார்பட்டி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊர் அருகில் இயங்கிவரும் கல்குவாரி வெடியால் பல வீடுகள் இடிந்து விட்டன. பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளன. குவாரியில் இருந்து செல்லும் கனரக வாகனங்களால் சாலைகள் பழுதடைந்து உள்ளன. எனவே இந்த கல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும், என்று கோரியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்