விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் முற்றுகை

விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தை ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனா்.

Update: 2022-10-12 18:45 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் ஒன்றியத்தில் 2022-23 ம் ஆண்டிற்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் சாலை வசதி, குடிநீர் தொட்டி, கால்வாய் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் ஒதுக்குவதற்கான ஒப்பந்தம் கோருதலுக்கான பணி நேற்று நடைபெற்றது. இதில், அரசியல் கட்சி பிரமுகர்கள் குறுக்கிட்டு அவர்களுக்கு சாதகமான ஒப்பந்ததாரர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

இதற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்கள் விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விருத்தாசலம் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் நீதிராஜன் தலைமை தாங்கினார்.

மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் ஜெயச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோமங்கலம் வீரபாண்டியன், சாத்துக்குடல் கீழ்பாதி சக்திவேல், புதூர் அண்ணாதுரை, சின்னப்பரூர் கீதா துரைமுருகன், ராஜேந்திரப்பட்டினம் சுரேஷ், விளாங்காட்டூர் பாலகிருஷ்ணன், பவழங்குடி ஜெயந்தி வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் முறையாகவும் சட்டப்படியும் ஒப்பந்தம் விடுவதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்