கடை உரிமையாளர் நடுரோட்டில் தீக்குளிப்பு

கொடைக்கானலில் இடத் தகராறு காரணமாக நடுரோட்டில் கடை உரிமையாளர் தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-06-06 19:00 GMT

கைவினை பொருட்கள் விற்பனை

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் பயாஸ் ராஜா (வயது 60). இவரது தம்பி சபீர்ராஜா (58). இவர்கள் கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வருகின்றனர்.

இதில் கட்டிடத்தின் மேல் தளத்தில் பயாஸ் ராஜாவும், கீழ் தளத்தில் சபீர் ராஜாவும் கடை வைத்துள்ளனர். இருவருக்கும் இடையே கடைக்கு செல்லக்கூடிய நடைபாதை தகராறு நீண்ட காலமாக இருந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைக்கு செல்வதற்கு இரும்பு கம்பிகளால் நடைபாதை ஒன்றை பயாஸ்ராஜா அமைத்துள்ளார். இதற்கு அவருடைய தம்பி எதிர்ப்பு தெரிவித்து, அந்த இரும்பு நடைபாதையை அகற்றியதாக கூறப்படுகிறது.

பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு

இதில் அண்ணன்-தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் மனமுடைந்த தம்பி சபீர்ராஜா நேற்று தனது கடை முன்பு நின்று திடீரென்று பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். தீ மளமளவென அவர் உடல் மீது பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதியில் கடை வைத்துள்ள வியாபாரிகள் அங்கு ஓடி வந்தனர். உடனே தண்ணீரை எடுத்து வந்து சபீர்ராஜா மீது ஊற்றி தீயை அணைத்தனர்.

இதில் படுகாயம் அடைந்த சபீர்ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். கடைக்கு செல்லும் பாதை பிரச்சினை காரணமாக சபீர்ராஜா தீக்குளித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் கைவினை பொருட்கள் கடை உரிமையாளர் தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்