தனுஷ் நடிக்கும் சினிமா படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்

தென்காசி அருகே தனுஷ் நடிக்கும் சினிமா படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது.

Update: 2023-04-25 18:45 GMT

தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் கடந்த சுமார் 3 மாதமாக சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் நடிகர் தனுஷ் நடிக்கும் `கேப்டன் மில்லர்' என்ற படமாகும். 1939-ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தின் பின்னணியாக கொண்டு இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காக பெரிய அளவில் அங்கு ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு முறை அங்கு குண்டு வெடிக்கப்பட்டதுபோல் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் ராணுவ வாகனங்கள் போன்று வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த படப்பிடிப்பிற்கு மாவட்ட நிர்வாகத்திலும், வனத்துறையிடமும் அனுமதி பெறவில்லையாம்.

மேலும் இங்கு புதிதாக ஒரு பாலம் அமைக்கப்பட்டதாகவும், அதற்கு பொதுப்பணி துறையிலும் அனுமதி பெறப்படவில்லை எனவும், இந்த தகவல் வெளியில் தெரிந்ததால் அந்த பாலத்தை படப்பிடிப்பு குழுவினர் அகற்றிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர் ராம.உதயசூரியன் புகார் கூறினார்.

இதுகுறித்த தகவல் அறிந்த தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் விதிமுறைகளை மீறியதாலும், அனுமதி பெறாததாலும் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்