உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விரைவில் சிவன் கோவில் அமைக்கப்படும்-தருமபுரம் ஆதீனம் தகவல்

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விரைவில் சிவன் கோவில் அமைக்கப்படும் என தருமபுரம் ஆதீனம் தெரிவித்தார்.

Update: 2022-06-24 19:45 GMT

வள்ளியூர்:

திருக்குறுங்குடியில் அழகிய நம்பிராயர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் அழகிய நம்பிராயர் சன்னதிக்கு வடக்கு பக்கத்தில், பக்கம்நின்றார் மகேந்திரநாதர் என்ற சிவன் சன்னதி உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்தபோது மகேந்திரநாதர் சன்னதியை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வைக்க முயன்றனர். இதனை எதிர்த்து சிவனடியார்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், மகேந்திரநாதர் கோவிலை முன்பிருந்தபடி அழகிய நம்பிராயர் கோவில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கடந்த மாதம் 10-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

இதையடுத்து தருமபுரம் ஆதீன 27-வது குரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமி நேற்று திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்புறப்படுத்தப்பட்ட மகேந்திரநாதர் சன்னதி அமைந்த இடத்தை பார்வையிட்டார். மேலும் திருக்குறுங்குடி ராமானுஜ ஜீயர் சுவாமியை சந்தித்து பேசினார்.

பின்னர் தருமபுரம் ஆதீனம் நிருபர்களிடம் கூறுகையில், 'திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட சிவன் கோவிலை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசு அனுமதி பெற்று, முன்பிருந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். ஜீயர் சுவாமியும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அறநிலையத்துறை அமைச்சருடன் பேசி விரைவில் இங்கு சிவன் கோவில் திருப்பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

இதற்கிடையே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நிலங்கள் பழவூர் அருகே இருக்கன்துறை, செட்டிகுளம் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ளன. அங்கு நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள், குத்தகை பணத்தை சரிவர செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அந்த இடங்களையும் தருமபுரம் ஆதீனம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்