சிவன் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்
சிவன் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கறம்பக்குடி:
கறம்பக்குடியில் பெரிய கருப்பர் கோவில் அருகே சுமார் 700 ஆண்டுகள் பழமைமிக்க சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சாமியின் பெயர் அனந்தேஸ்வரமுடையார். அம்பாளின் பெயர் மங்களாம்பிகை. இக்கோவிலில் கால பைரவர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், துர்க்கை உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோவில்களும் உள்ளன. தொன்மையான கலை அம்சங்களுடன் கட்டப்பட்ட இந்த கோவில் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து இடுபாடுகளுடன் இருந்தது. இந்த கோவிலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களின் தீவிர முயற்சியால் கோவில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் திருப்பணி வேலைகள் தொடராமல் முடங்கிப் போய் உள்ளது. தற்போதும் பணிகள் நடை பெறாமல் உள்ளன. இதனால் பிரதோஷம் உள்ளிட்ட தினங்களில் இந்த கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி. ஆனால், இருக்கின்ற கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் இருப்பது பக்தர்களை வேதனைப்பட செய்து உள்ளது. எனவே தமிழக அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையும் சிறப்புமிக்க இந்த கோவிலை உடனடியாக புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.