கிடப்பில் போடப்பட்ட சாலை பணி மீண்டும் தொடங்கியது

குன்னூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சாலையை சீரமைக்கும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.

Update: 2023-03-13 18:45 GMT

குன்னூர், 

குன்னூரில் பழுதடைந்த சாலையை சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சாலையை சீரமைக்கும் பணி மீண்டும் தொடங்கி உள்ளது.

குண்டும், குழியுமான சாலை

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 28-வது வார்டுக்கு உட்பட்டது பாலக்கிளவா பகுதி. இந்த பகுதியில் இருந்து முதியோர் இல்லம் செல்லும் சாலை முக்கிய சாலையாக உள்ளது. அந்த சாலையில் தனியார் மருத்துவமனை இருக்கிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இந்த சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மேலும் முதியவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கரடு, முரடான சாலையில் நடந்து செல்ல சிரமப்பட்டனர். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சாலையை சீரமைக்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் சாலை பணிக்காக டெண்டர் விடப்பட்டது.

சாலை சீரமைப்பு

இதனால் ஏற்கனவே இருந்த தார்ச்சாலை அகற்றப்பட்டு, ஜல்லி உள்ளிவை மூலம் சாலையை சீரமைக்க முதல் கட்ட பணிகள் தொடங்கியது. ஆனால், பணிகள் மேற்கொள்ளப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இதனால் சாலையில் பரப்பிய கற்கள் மட்டும் இருந்ததோடு, தார் போடப்படாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இதுகுறித்து கடந்த 9-ந் தேதி தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சாலையை சீரமைக்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் முதியவர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்