விடுதலை சிறுத்தை கட்சியினர் குடியேறும் போராட்டம்

மங்களபுரம் அம்பேத்கர் நகரில் கழிவுநீர் தேங்கியதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-13 18:12 GMT

ராசிபுரம்

ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மங்களபுரம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வீடுகளுக்கு முன் கழிவுநீர் தேங்கி நிற்பதாக கூறி நடவடிக்கை எடுக்கும்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தினர். இதற்காக அவர்கள் காலிக்குடங்கள், கியாஸ் போன்றவற்றை சுமந்து வந்தனர். போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் தலைமை தாங்கினார். நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் கபிலன், மாவட்ட துணை செயலாளர் நீல வானத்து நிலவன், ராசிபுரம் தொகுதி செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் நகர துணை செயலாளர் சுகுவளவன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட துணை அமைப்பாளர் கனகராஜ், வெண்ணந்தூர் ஒன்றிய பொருளாளர் செங்குட்டுவன், நாமகிரிப்பேட்டை ஒன்றிய பொருளாளர் தங்க வளவன், மங்களபுரம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர்.

போராட்டம் நடத்தியவர்களுடன் ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் கலையரசன், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், சுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். இது பற்றி மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் கூறியதாவது:- மங்களபுரம் அம்பேத்கர் நகரில் கழிவு நீரை அகற்றுவதற்கு ரூ.25 லட்சத்தில் திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததின் பேரில் குடியேறும் போராட்டம் கைவிடப்பட்டது என்று கூறினார்.

இதுபற்றி அதிகாரிகளிடத்தில் கேட்டபோது அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ.11 லட்சத்தில் கழிவு நீரை அகற்றுவதற்கு பணிகள் நடந்து வருகிறது. மேலும் தேவையான நிதியை பெற்று பணிகள் செய்து முடிக்கப்படும் என்று கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்