தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

நிறைவு நாளில் பொது பட்ஜெட் , வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.

Update: 2024-02-22 01:08 GMT

சென்னை,

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்ததால், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.இதற்காக பேரவை விதி எண்ணிலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது. கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கடந்த 15-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இந்தநிலையில் சட்டப்பேரவையில் கடந்த 19ம் தேதி 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து கடந்த 20ம் தேதி 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது இந்த பட்ஜெட் உரையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பல்வேறு வேளாண் சார்ந்த அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். .

இந்த நிலையில்  தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன்   நிறைவடைகிறது. நிறைவு நாளில் பொது பட்ஜெட் , வேளாண் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்