ஏழைகளின் அட்சய பாத்திரமாக திகழும் அம்மா உணவகங்களின் சேவை உயர்த்தப்படுமா? பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

ஏழைகளின் அட்சய பாத்திரமாக திகழும் அம்மா உணவகங்களின் சேவையை உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Update: 2022-09-20 22:09 GMT

சேலம்

அம்மா உணவகங்கள்

தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் மலிவு விலையில் வயிறார உணவு உட்கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தொடங்கப்பட்டது தான் அம்மா உணவகம். மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் இந்த திட்டம் கடந்த 2013-ம் ஆண்டு முதன்முதலில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இந்த திட்டத்தால் ஏழை, எளியவர்கள் ஏராளமானோர் பயன் பெற்றனர். இதையடுத்து தமிழகத்தின் பிற மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

மொத்தம் 15 இடங்களில்

அந்த வகையில், சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, வின்சென்ட், அரசு ஆஸ்பத்திரி, வெங்கடப்பன் செட்டி ரோடு, மணியனூர், கருங்கல்பட்டி, ஆற்றோரம் மார்க்கெட் பகுதி, ஜோதி தியேட்டர் அருகில், சத்திரம், சூரமங்கலம் உழவர் சந்தை, பழைய சூரமங்கலம் என 11 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர மாவட்டத்தில் ஆத்தூர், நரசிங்கபுரம், எடப்பாடி மற்றும் மேட்டூர் ஆகிய 4 நகராட்சிகளிலும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த உணவகங்களில் பெரும்பாலும் அன்றாட கூலித்தொழிலாளர்கள், டிரைவர்கள், வசதி குறைவான ஏழை, எளிய மக்கள் உணவு சாப்பிட்டு வருகின்றனர். அம்மா உணவகத்தில் காலையில் ரூ.1-க்கு இட்லி மற்றும் சாம்பார், மதியம் ரூ.5-க்கு சாம்பார் சாதம், ரூ.3-க்கு தயிர்சாதம் ஆகியவை வழங்கப்படுகிறது. காலை 7 மணி முதல் 10 மணி வரை டிபன் உணவும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கலவை சாதமும் வழங்கப்படுகிறது.

அட்சய பாத்திரமாக...

தமிழகத்தில் அம்மா உணவகங்கள் கொரோனா காலத்தில் பசிபிணி போக்கிய ஆலயங்களாக திகழ்ந்தது என்றால் மிகையில்லை. கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், சாலைகள் வெறிச்சோடி நகரமே மயான அமைதியாக இருந்த காலத்தில் அம்மா உணவகங்கள் தான் ஏழை, எளியவர்களின் பசி போக்கும் அட்சய பாத்திரமாக திகழ்ந்தன. ஆனால் தற்போது அம்மா உணவகங்களில் குறைவான அளவில் மட்டுமே உணவு அருந்த பொதுமக்கள் வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் மட்டும் காலை மற்றும் மதியம் வேளையில் உணவு சாப்பிடுவதற்கு பொதுமக்கள் கூட்டம் வரிசையில் நிற்பதை காணமுடிகிறது. ஏனென்றால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவும், உள் நோயாளிகளின் உறவினர்கள் அதிகளவில் வந்து செல்வதாலும் அம்மா உணவகத்தை நம்பி உணவு அருந்த அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர்.

சேவையை அதிகரிக்க...

விலைவாசி உயர்ந்து கொண்டே செல்லும்போது, தனியார் ஓட்டலில் உணவு கட்டணம் அதிகரிக்கும். ஆனால் அம்மா உணவகத்தில் இத்திட்டம் தொடங்கிய நாள் முதல் இதுவரை ஒரே கட்டணமேவசூலிக்கப்படுகிறது.

ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக விளங்கும் அம்மா உணவகத்திற்கு புத்துயிர் ஊட்டி அதன் சேவையை மேலும் அதிகரிக்க வேண்டும். ஆட்சி மாறியதால் காட்சி மாறியது என இருக்க கூடாது. இந்த உணவகங்களை மேம்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

------------------------------


அளவு சாப்பாடு, கலவை சாதம் வழங்கினால் வருவாய் அதிகரிக்கும்

அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரம், ஊழியர்களின் செயல்பாடு குறித்து வாடிக்கையாளர்கள் கூறிய கருத்துக்களை காண்போம்.

தம்மம்பட்டியை சேர்ந்த வாடிக்கையாளர் ராஜேந்திரன் கூறியதாவது:-

நான் கூலித்தொழிலாளி. எனது அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தேன். இங்குள்ள அம்மா உணவகத்தில் சாப்பிட்டேன். நன்றாக இருக்கிறது. இட்லிக்கு சாம்பார் மட்டும் தருகிறார்கள். கூடவே சட்னியும் தந்தால் நன்றாக இருக்கும். வெளி ஓட்டலில் சாப்பிட்டால் 4 இட்லிக்கு ரூ.40 செலவு ஆகும். ஆனால் அம்மா உணவகத்தில் ரூ.5-க்கு 5 இட்லி சாப்பிட்டு விடலாம். விலை குறைவாக இருந்தாலும் இங்கு காலையில் வழங்கப்படும் இட்லி, மதிய நேரத்தில் வழங்கப்படும் சாதம் சுவையாக உள்ளது. உணவு வழங்கும் முறையை மாற்ற வேண்டும்.

ஓமலூரை சேர்ந்த இல்லத்தரசி செல்வி கூறியதாவது:-

அம்மா உணவகத்தை நன்றாக சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கின்றனர். காலையில் இட்லி, பொங்கலும், மதியம் சாம்பார் மற்றும் தயிர்சாதமும் விற்பனை செய்கின்றனர். சில நாட்களில் சாம்பார் நன்றாக இல்லை. மதியம் வழங்கும் சாதங்கள் நன்றாக உள்ளது. இந்த திட்டம் தொடங்கிய நாள் முதல் இதுபோன்ற உணவு தான் வழங்கப்படுகிறது. அதை மாற்ற வேண்டும். அதாவது, காலையில் இட்லி, கிச்சடியும், மதியம் தக்காளி, லெமன் போன்ற கலவை சாதமும், ரூ.10-க்கு அளவு சாப்பாடும் வழங்கினால் நன்றாக இருக்கும். அவ்வாறு செய்தால் அம்மா உணவகத்திற்கு வருவாய் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

------------------

அம்மா உணவகத்தின் தரத்தை மேலும் அதிகரிக்க வேண்டும்

சேலம் அரசு ஆஸ்பத்திரி அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ரேஷ்மா கூறியதாவது:-

எங்களது உணவகத்தில் காலையில் 1,200 இட்லியும், மதியம் 300 சாம்பார் சாதமும், 300 தயிர் சாதமும் விற்பனை ஆகும். அதற்கு ஏற்ற மாதிரி உணவு தயாரிப்போம். ஞாயிறு தவிர மற்ற நாட்களில் வழக்கம் போல் கூட்டம் இருக்கும். கொரோனாவுக்கு முன்பு அதிகளவில் மக்கள் வந்து சென்றார்கள். இதற்கு முன்பு இருந்ததை போல் வாடிக்கையாளர்கள் வரத்து சற்று குறைந்து காணப்பட்டாலும், அம்மா உணவகத்தையே மட்டும் நம்பியுள்ள மக்கள் அன்றாடம் வந்து சாப்பிட்டு செல்கிறார்கள். அம்மா உணவகத்தின் தரத்தை மேலும் அதிகரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

சேலம் வின்சென்ட் அம்மா உணவக ஊழியர் ராணி கூறியதாவது:-

எங்கள் உணவகம் அருகில் அரசு கலைக்கல்லூரி இருப்பதால் காலையிலும், மதியமும் கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் வந்து சாப்பிடுகிறார்கள். மதியம் சாம்பார் மற்றும் தயிர் சாதம் சுவையாக சமைத்து கொடுக்கிறோம். இருப்பினும், தக்காளி, லெமன், சப்பாத்தி என வேறுவிதமான உணவை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். உணவு முறையை சற்று மாற்றி அமைத்தால் அதிக கூட்டம் வருவதோடு வருவாய் அதிகரிக்கும் என நம்புகிறேன். உணவகத்திற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் சரியாக வருகிறது. எந்த குறைபாடும் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

--------------------------------

வருவாய் ரூ.5 லட்சம்; செலவு ரூ.40 லட்சம்

சேலம் மாநகராட்சியில் உள்ள 11 அம்மா உணவகங்களில் தினமும் காலையில் 10 ஆயிரம் இட்லியும், சுமார் 3 ஆயிரம் சாம்பார் சாதமும், 3 ஆயிரம் தயிர்சாதமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒரு மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது. ஆனால் அதற்கு தேவையான செலவினம் பல மடங்கு ஆகி விடுகிறது. காய்கறி, அரிசி, பருப்பு, தயிர் உள்ளிட்ட மளிகை பொருட்கள், ஊழியர்களின் சம்பளம் என்று செலவு அதிகமாக உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை ஒரு ஆண்டில் 11 அம்மா உணவகங்களுக்கு ஒரு ஆண்டில் ரூ.39 லட்சத்து 36 ஆயிரத்து 915 என சுமார் ரூ.40 லட்சம் செலவு ஆகியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

------------------------

தினமும் 1 லட்சம் பேர் வருகை

சேலம் மாநகரில் 11, புறநகரில் 4 என மொத்தம் 15 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களுக்கு தினமும் காலை மற்றும் மதியம் வேளையில் சராசரியாக சுமார் 1 லட்சம் பேர் வந்து உணவு அருந்திவிட்டு செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் ஒவ்வொரு உணவகத்திற்கும் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தினமும் ரூ.3,600-க்கு விற்பனை இருக்க வேண்டும் எனவும், அதற்கு ஏற்றமாதிரி ஊழியர்கள் உணவு தயாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு அம்மா உணவகத்திலும் 12 பெண்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் 2 ஷிப்டுகளாக பணிக்கு வந்து செல்கின்றனர். அவர்களுக்கு தினமும் ரூ.325 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்