இளைஞர்களை தொற்றிய 'செல்பி' மோகம்

இளைஞர்களை ‘செல்பி' மோகம் தொற்றியுள்ளது.

Update: 2023-08-18 18:45 GMT

புகைப்படங்களின் சிறப்பும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடப்படும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி உலகப் புகைப்பட நாள் விழா கொண்டாடப்படுகிறது.

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 839-ல் பிரெஞ்சு அறிவியல் அகாடமி அந்தக் கண்டுபிடிப்பை அங்கீகரித்தது. அதை 'உலகிற்கு ஒரு பரிசு' என்று அழைத்தது. பின்னர் பிரெஞ்சு அரசாங்கம் காப்புரிமையை வாங்கியது. ஆகஸ்டு 19-ந்தேதி, பிரான்ஸ் நாட்டு அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை 'பிரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைக்கும் உலகப் புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

1826-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839-ம் ஆண்டு லூயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள போல்வர்டு கோவிலை, அருகில் உள்ள தெருவைப் புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இதுவாகும்.

வரலாற்றுப் படங்கள்

20-ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. குறிப்பாக, சீன வீரர்களின் ராணுவப் பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994-ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றைக் கூறலாம்.

சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிகை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு புலிட்சர் விருதுகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வரலாற்றோடு வளர்ந்து வரும் புகைப்படக்கலை தற்போது அனைவரது கைகளுக்கும் செல்போன்கள் மூலம் சென்றுவிட்டது. தன்னையே தான், படம் எடுக்கும் செல்பி வரைக்கும் வளர்ந்துவிட்டது.

இது பற்றி புகைப்பட கலைஞர்கள், பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

கண்ணியமாக இருக்க வேண்டும்

22 ஆண்டுகளாக புகைப்பட கலைஞராக இருந்து சாதனை படைத்து வரும் கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த வச்சலாதேவி முரளி கூறும் போது, நான் பிளஸ்-2 படிக்கும் போதே புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். இது வரை அனைத்து விதமான கேமராவிலும் புகைப்படம் எடுத்து இருக்கிறேன். வீடியோவும் எடுத்து வருகிறேன். எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆண்களுக்கு நிகராக நானும் களத்தில் நின்று புகைப்படம் எடுக்கிறேன்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த போது, அவரை புகைப்படம் எடுத்தேன். அவர் என்னை சிறு வயதில் நன்றாக புகைப்படம் எடுக்கிறாய் என்று என்னை பாராட்டினார். அதை நினைத்தால் இப்போதும் பெருமையாக இருக்கிறது. முன்பு நிறைய ஆர்டர்கள் கிடைக்கும். இப்போது மாதத்திற்கு 2 ஆர்டர் கிடைப்பதே அரிதாகி விட்டது. புகைப்பட தொழில் மிகவும் நலிவடைந்து விட்டது. இதனால் தொடர்ந்து கடையை நடத்துவதா? வேண்டாமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.

முன்பு ஒரு நிகழ்ச்சிக்கு புகைப்பட கலைஞராக சென்றால், மிகவும் மரியாதையாக நடத்துவார்கள். இப்போது அப்படி இல்லை. காலம் மாறி விட்டது. அதற்கேற்ப நாங்களும் மாறி வருகிறோம். முன்பு ஒரு படம் எடுத்து, அதை பார்க்க குறைந்தது 2 அல்லது 3 நாட்கள் ஆகி விடும். ஆனால் இப்போது நொடிப்பொழுதில் செல்போனில் படம் எடுத்து பார்த்துக்கொள்கிறார்கள். தன்னை தானே புகைப்படம் எடுக்கும் செல்பி மோகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் அவை அவர்களுக்கே ஆபத்தாகி விடுகிறது. ஜோடிகளாக செல்பி புகைப்படம் எடுப்பது தற்போது பிரபலமாகி வருகிறது. ஆனால் பொதுவெளியில் எடுக்கும் புகைப்படங்கள் கண்ணியமாகவும், நமது கலாசாரம் மற்றும் பண்பாட்டை காப்பாற்றும் விதமாக இருக்க வேண்டும் என்றார்.

யாரும் படம் எடுக்கலாம்

சர்வதேச அளவில் வெளிநாடுகளில் சென்று இயற்கை காட்சிகளை பதிவு செய்யும் புகைப்பட கலைஞர் கார்த்தி சுந்தரராஜன் கூறும் போது, 'ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும். எளிதாக மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் புகைப்படத்துக்கு உண்டு. புகைப்படம் எடுப்பதற்கு ஒரு காலகட்டத்தில் அதிகப் பணம் செலவிட வேண்டி இருந்தது. ஆனால் தற்போது டிஜிட்டல் மயமானதால் செல்போன்களில் படம் எடுப்பது என்பது செலவு குறைந்து உள்ளது. அதேபோல் முன்பு புகைப்படம் எடுப்பது என்றால் அதற்கான கேமரா மற்றும் அதுதொடர்பான தொழில்நுட்ப அறிவும் தேவை. ஆனால் இப்போது பெரிய அளவிலான கேமரா மற்றும் புகைப்படம் எடுப்பது தொடர்பான ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவு எதுவும் தேவையில்லை. செல்போன் வைத்திருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இன்றைய தலைமுறையினருக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள நிகழ்வுகளை பதிவு செய்ய செல்போன் பேருதவியாக இருக்கிறது. ஆனால் படங்களை நினைத்த அளவில் பெரிது படுத்தவோ, பாதுகாக்கவோ முடிவதில்லை. பெயரளவிற்கு சமூக ஊடகங்களில் பதிவு செய்தால் மட்டும் போதும் என்ற நிலையில் தான் படம் எடுக்கின்றனர். தற்போது செயற்கை நுண்ணறிவு முறையும் புகைப்படத்துறையில் வந்துவிட்டதால் எது உண்மையான படம், எது செயற்கையாக தயாரிக்கப்பட்ட படம் என்பதை கண்டறிவதும் கடினமாக இருந்து வருகிறது. மொத்தத்தில் புகைப்படத்துறை அபார வளர்ச்சி அடைந்து உள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்