சுயதொழில் செய்வோரை ஊக்கப்படுத்தி நிதி உதவி பெற்று கொடுக்க வேண்டும்
கிராமப்புறங்களில் சுயதொழில் செய்வோரை ஊக்கப்படுத்தி அரசு வழங்கும் நிதிஉதவியை ஊராட்சி மன்ற தலைவர்கள் பெற்று கொடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
ஆலோசனை கூட்டம்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிமன்ற தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் ப.கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், அமலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அனைத்து ஊராட்சிமன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நேரில் கள ஆய்வு செய்து 20 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சுயதொழில் செய்வோருக்கு நிதிஉதவி
அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்க ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டது. எந்த கிராமத்திற்கும் சுடுகாடு வசதி இல்லை என்ற நிலை இருக்கக்கூடாது. எனவே வருவாய்த்துறையினர் கிராமங்களில் சுடுகாடு அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும். ஊராட்சிகளில் ஏதேனும் இடம் இருந்தால் அதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி கொண்டு வந்தால் அது உடனடியாக நிறைவேற்றப்படும்.
கிராமப்புறங்களில் சுயதொழில் செய்யும் மக்களை ஊக்கப்படுத்தி அரசு வழங்கும் பல்வேறு நிதி உதவி மற்றும் மானிய உதவிகளை பெற்று கொடுக்க வேண்டும். குறிப்பாக கால்நடை வளர்ப்புக்கு தேவையான நிதி உதவி, மகளிர் திட்டம் அல்லது முன்னோடி வங்கிகளின் மூலமாகவோ அல்லது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிட நலத்துறை போன்ற துறைகளில் வாயிலாகவோ ஏற்பாடு செய்ய வேண்டும். ஊராட்சிமன்ற தலைவர்கள் தங்களுடைய பகுதியில் சுய தொழில் புரிவோருக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் தொழில் புரிய உதவிகரமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
முன்னதாக கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள் தங்களின் ஊராட்சிக்கு சாலைவசதி, அங்கன்வாடி, சுடுகாடு, எரிமேடை, குடிநீர்வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களும் தங்கள் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், வேலூர் உதவி கலெக்டர் கவிதா, ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.