சீல் வைத்த சாத்தான்குளம் போலீஸ் நிலைய அறையை திறக்கலாம்
தந்தை-மகன் கொலை நடந்தபோது, சீல் வைத்த சாத்தான்குளம் போலீஸ் நிலைய அறையை திறக்க அனுமதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தந்தை-மகன் கொலை நடந்தபோது, சீல் வைத்த சாத்தான்குளம் போலீஸ் நிலைய அறையை திறக்க அனுமதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தந்தை-மகன் கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், இவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது, விசாரணைக்காக சாத்தான்குளம் போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு கடுமையாக போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர்கள் பரிதாபமாக அடுத்தடுத்து இறந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த சமயத்தில் மதுரை ஐகோர்ட்டின் நிர்வாக நீதிபதியாக இருந்த பி.என்.பிரகாஷ் மற்றும் நீதிபதி புகழேந்தி ஆகியோர், இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
சி.பி.ஐ. விசாரணை
பின்னர் இந்த இரட்டைக்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர். அதன்படி இந்த வழக்கில் அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசார் கைதாகி, மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்த இரட்டைக்கொலை வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஐகோர்ட்டு தாமாக முன்வந்து இந்த சம்பவத்தை விசாரித்தபோது, ஜெயராஜின் மனைவி செல்வராணி உள்ளிட்ட பலர், இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தும் நிலுவையில் இருந்தன. அவ்வப்போது இரட்டைக்கொலை வழக்கு விசாரணையின் அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி
இந்த நிலையில் இந்த மனுக்கள் அனைத்தும் மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது வக்கீல் ஹென்றி டிபேன் ஆஜராகி, தந்தை-மகன் கொலை சம்பவம் குறித்து இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரித்தபோது, போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் புத்தாக்க பயிற்சி வழங்க வேண்டும் என்று தெரிவித்தது. இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கின் காரணமாகவும், போதிய நிதி இல்லாமலும் தற்போது புத்தாக்கப்பயிற்சி அளிக்கப்படுவதாக தெரியவில்லை, என வாதாடினார்.
அதற்கு நீதிபதிகள், காவல்துறையினர் ஏற்கனவே அதிக மனஅழுத்தத்தில் உள்ளனர். அவர்களது குடும்பத்தினரும் அழுத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் இதற்கான நிதி இல்லை என்பது ஏற்கத்தக்கதல்ல, என்றனர்.
இது தொடர்பாக உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிப்பதாக அரசு வக்கீல் கூறினார்.
கூடுதல் உத்தரவு தேவையில்லை
பின்னர் நீதிபதிகள், சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை கீழ்கோர்ட்டில் முறையாக நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்காமல் விசாரணை நடக்கிறது. எனவே இந்த நேரத்தில் இந்த விசாரணையில் ஐகோர்ட்டு தலையிடுவது சரியாக இருக்காது. இதில் கூடுதல் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை.
எனவே இங்கு நிலுவையில் உள்ள இடையீட்டு மனுக்கள் அனைத்தும் முடித்து வைக்கப்படுகின்றன. இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கும், சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் விசாரணைக்கு சென்ற மாஜிஸ்திரேட்டுவை போலீசார் அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையும் வருகிற 4-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. சாத்தான்குளம் சம்பவத்தின்போது, போலீஸ்நிலையத்தில் சீல் வைக்கப்பட்ட அறையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திறந்துவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.