நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்தது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு பெருமை - மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

“நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்தது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த பெருமை” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Update: 2023-06-01 18:54 GMT


"நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்தது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த பெருமை" என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

பேட்டி

மதுரைக்கு நேற்று விமானத்தில் வந்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கான நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை. அது கண்டிக்கத்தக்கது. இந்தியாவுக்காக விளையாடும் வீராங்கனைகளுக்கு பாதுகாப்பு இல்லை. அந்த துறையை சேர்ந்தவர்களே குற்றம் செய்ததாக சொல்கிறார்கள்.

தாங்கள் வென்ற பதக்கங்களை கங்கையில் போடுவதாக சொல்லி இருக்கிறார்கள். எனவே வீராங்கனைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

கர்நாடகா அரசு, மேகதாது அணை கட்டுவதாக கூறியிருக்கிறது. ஏற்கனவே பா.ஜனதா ஆட்சியின் போதும் இதைத்தான் சொன்னார்கள். தற்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் மேகதாது அணை பற்றி பேசுகிறார்கள். அங்கு அணை கட்டுவதை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். தமிழக அமைச்சரும் மேகதாது வராது என்று சொல்லி இருக்கிறார். அங்கு பதவி ஏற்பு விழாவில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டார், அது பெரிதல்ல. தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தை நிச்சயம் அவர் பெற்றுத்தர வேண்டும்.

அமைச்சர் செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புைடய இடங்களில் வருமானவரி சோதனை நடந்த விவகாரத்தில், தங்கள் கடமையை ஆற்றுவதற்காக வரும் அதிகாரிகள், தங்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என்று ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை சொல்கிறது. காவல்துறை இன்று ஏவல்துறையாக மாறி உள்ளது. அதுதான் திராவிட மாடல். இது கண்டிக்க வேண்டியது.

வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி இருக்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செங்கோல்

தமிழ் பாரம்பரியத்தை எடுத்துரைப்பதற்காக நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்துள்ளார்கள். இது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. இதற்கு முன்பாக அந்த செங்கோல் எங்கிருந்தது என்று யாருக்கும் தெரியாது. தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்ற அவர்கள் எடுத்து வைக்கும்போது அதில் எதற்கு சர்ச்சை ஏற்படுத்துகிறார்கள்?

இவ்வாறு அவர் கூறினார்.

குலதெய்வ கோவிலில் வழிபாடு

திருமங்கலம் அருகே உள்ள காங்கேயநத்தம் கிராமத்தில் விஜயகாந்தின் குலதெய்வமான வீர சின்னம்மாள் கோவில் உள்ளது. நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் பங்கேற்ற தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்்த் பின்னர், வீர சின்னம்மாள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். கோவிலில் தற்போது கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அப்போது, தே.மு.தி.க. உயர்மட்ட குழு உறுப்பினர் பாலன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி, வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்தர், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன், தேர்தல் பணிக்குழு செயலாளர் அழகர்சாமி, திருமங்கலம் நகர செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், கவுன்சிலர் தீபா சுந்தர் உள்ளிட்டோரும் சென்று இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்