சாராய விற்பனையை தடுக்க வேண்டும்

காமேஸ்வரத்தில் சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர்.

Update: 2023-04-17 18:45 GMT


காமேஸ்வரத்தில் சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர்.

சாராய விற்பனை

நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட காமேஸ்வரம் பகுதியை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

காமேஸ்வரம் கிராமத்தில் சாராயம் விற்பனை தடையின்றி நடைபெறுகிறது. காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். கீழையூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு சாராய விற்பனையை தடுக்க வேண்டும். மேலும் சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும்.

வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து அனைத்து மகளிர் சுய உதவிக்குழு சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.

இங்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிதண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. கைப்பம்பில் தான் குடிப்பதற்கு தண்ணீர் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. சுனாமியின் போது கடல் நீர் உட்புகுந்ததால் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியது.

குடிநீர் கிடைக்க நடவடிக்கை

தற்போது கோடை காலத்தில் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. இங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள அசகண்ட வீரப்பன் சாமி கோவில் அருகில் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. எனவே அந்த இடத்தில் இருந்து குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

திருவாய்மூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இதற்கான வரியை தவறாமல் செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் குடிசை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்