உடன்குடியில் ஊருக்குள் புகுந்த மிளாவை கயிறு கட்டி பிடித்ததால் இறந்த பரிதாபம்
உடன்குடியில் ஊருக்குள் புகுந்த மிளாவை கயிறு கட்டி இழுத்து பிடித்ததால் பரிதாபமாக இறந்து போனது.
உடன்குடி:
உடன்குடியில் ஊருக்குள் புகுந்த மிளாவை கயிறு கட்டி பிடித்ததால் பரிதாபமாக இறந்தது.
உணவு தேடி வந்த மிளா
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே குலசேகரன்பட்டினம் தருைவகுளம் பகுதியில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. அங்கு மிளா, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு தேடி ஊருக்குள் வருவது வழக்கம்.
நேற்று முன்தினம் காட்டுப்பகுதியில் இருந்து மிளா ஒன்று உணவு தேடி தருவைகுளத்தின் பகுதிக்கு வந்தது. அப்போது, அங்கு நின்றிருந்த மாடுகளுடன் இரவு 10 மணி அளவில் மிளாவும் உடன்குடி பஜார் பகுதிக்கு வந்தது.
வணிக வளாகம்
மிளா ஊருக்குள் வந்ததை பார்த்த வியாபாரிகள், பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக திருச்செந்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் மிளா அங்கும், இங்கும் ஓடி அருகில் உள்ள வணிக வளாகம் பகுதியில் புகுந்தது. அங்கு மிளா ெவளியே செல்ல முடியாத அளவுக்கு ஒரு தடுப்பு வைக்கப்பட்டது.
கயிறு மூலம் பிடிக்க...
நள்ளிரவு 1 மணி அளவில் வனத்துறையினர் ஜீப்புடன் அங்கு வந்தனர். அவர்கள் உடனடியாக மிளாவை பிடிக்க முயன்றனர். ஆனால் அது அங்கும், இங்கும் ஓடிக் கொண்டு இருந்தது.
இதனால் முட்டிவிடுமோ என்ற பயத்தில் கயிறு மூலம் மிளாவை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். மாடியில் இருந்து வனத்துறை ஊழியர்கள் கயிற்றில் சுருக்கு முடிச்சு போட்டு மிளாவின் கழுத்தில் இட்டனர்.
பரிதாபமாக இறந்தது
அப்போது, எதிர்பாராதவிதமாக மிளா ஓடியதால் அதன் கழுத்தை கயிறு இறுக்கியது. மேலும் மிளாவும் அருகில் உள்ள காம்பவுண்டு சுவர், கதவுகள் மீதும் மோதியது. இதனால் கழுத்து, தலை, உடல் பகுதியில் காயம் ஏற்பட்டு மயங்கியது.
இதையடுத்து வனத்துறையினர் மிளாவை மீட்டு ஜீப்பில் உடன்குடியில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அது பரிதாபமாக இறந்தது. பின்னர் மிளா பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, தேரிக்குடியிருப்பு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'ஊருக்குள் வனவிலங்குகள் புகுந்தால் கூண்டு அல்லது வலை விரித்து வனத்துறையினர் பிடிப்பது வழக்கம். ஆனால் இந்த மிளாவை வனத்துறையினர் கயிறு போட்டு பிடித்துள்ளனர். இதனால் தான் தலை, உடலில் காயம் ஏற்பட்டு மிளா இறந்துள்ளது. வலை விரித்து பிடித்து இருந்தால் மிளா இறந்திருக்காது. இனிவரும் காலங்களில் கயிறு மூலம் வனவிலங்குகளை பிடிக்கும் முயற்சியை வனத்துறையினர் கைவிட வேண்டும்' என்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரியிடம் கேட்டபோது, 'இறந்த மிளாவானது சாம்பார் வகையைச் சேர்ந்த 4 வயது பெண் மிளாவாகும். அதன் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் அது எப்படி இறந்தது என ெதரியவரும். அதன்பின்னர் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
உடன்குடியில் ஊருக்குள் புகுந்த மிளாவை கயிறு கட்டி பிடித்ததால் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.