தாசில்தார் அலுவலக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாசில்தார் அலுவலக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை கொக்கிரகுளத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தின் நுழைவு வாயிலின் இடதுபுறத்தில் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இதில் தற்போது மகளிர் திட்ட அலுவலகம், புவியியல் சுரங்கம், கைத்தறித்துறை ஆகிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தின் ஒரு பகுதியில் வாஞ்சி மணியாச்சி முதல் கன்னியாகுமரி வரை உள்ள ரெயில்வே பாதைக்கான நில எடுப்பு தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலக அறையின் மேற்கூரை கட்டிடம் நேற்று மதியம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இந்த சத்தம் கேட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள், போலீசார் ஓடிச் சென்று பார்வையிட்டனர்.
அலுவலகத்திற்கு பூட்டு
கட்டிடம் இடிந்து விழுந்தபோது அலுவலகத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மேற்கூரை இடிந்து விழுந்ததையடுத்து அந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சுரங்கம் மற்றும் புவியியல் துறை அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், வருவாய் நீதிமன்ற அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு அனைத்து அலுவலகங்களுக்கும் பூட்டு போடப்பட்டது.
உயிர் தப்பினோம்
இதுகுறித்து மகளிர் திட்ட அலுவலக ஊழியர்கள் கூறுகையில், 'மகளிர் திட்ட அலுவலகத்தில் ஊரக மற்றும் நகர்புறம் என 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகிறோம். மதிய உணவு இடைவேளையில் இடிந்து விழுந்த பகுதியில் அமர்ந்து சாப்பிடுவதும் வழக்கம். ஆனால் நேற்று காலை அலுவலகத்திற்கு வந்தவுடன் ஊழியர்கள் வாராந்திர ஆய்வு கூட்டத்திற்கு சென்றதால் உயிர் தப்பினோம்' என்றனர்.