அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
கம்மாபுரம் அருகே அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்மாபுரம்,
பெயர்ந்து விழுந்தது
கம்மாபுரம் ஒன்றியம் வடக்குவெள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்குவெள்ளூர் பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வகுப்புகள் நடைபெற்றது. அப்போது மதியம் 12.30 மணி அளவில் திடீரென கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் யாருக்கும் இதில் காயம் ஏற்படவில்லை.
அச்சம்
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், சில சமயங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்தும் வருகிறது. இதனால் அங்கன்வாடி மைய கட்டிடம் பலவீனம் அடைந்து காணப்படுவதால், இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற நிலையில் உள்ளது. சேதமடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப அச்சமாக உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.