கீழ்வேளூர் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி கருணாவெளி கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது60). கூலி தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் ஜெயராமன் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் மற்றும் வீட்டு பத்திரம், ரேஷன் கார்டு, வீட்டு பட்டா உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் கேசவன் மற்றும் பலர் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் நிவாரண உதவிகளை வழங்கினர். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.