நெல் பயிர் நோய் கட்டுப்பாட்டில் வேம்பின் பங்கு

நெல் பயிர் நோய் கட்டுப்பாட்டில் வேம்பின் பங்கு குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் யசோதா விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-06-12 21:24 GMT

நெல் பயிர் நோய் கட்டுப்பாட்டில் வேம்பின் பங்கு குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் யசோதா விளக்கம் அளித்துள்ளார்.

வேப்பம் புண்ணாக்கு

வேப்பம் புண்ணாக்கு நெல் வயலுக்கு இடுவதால் பழுப்பு இலைப்புள்ளி நோய் குறைகிறது. குலைநோய், இலையுறை கருகல் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது. நெல் நாற்றங்காலில் வேப்பம் புண்ணாக்கை ஏக்கருக்கு 375 கிலோ கிராம் வீதம் கடைசி உழவின்போது மண்ணில் கலந்து நாற்றங்காலை தயாரித்தால் வளரும் நாற்றுகளில் நோய் மற்றும் பூச்சியினாலும் ஏற்படும் பாதிப்பு குறைவாக உள்ளது.

வேப்பம் எண்ணெய் 3 சதவீதம் மற்றும் வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் ஆகியவற்றை தெளிப்பதால் நெல்லின் கதிர் உறை அழுகல் நோய், செம்புள்ளி நோய், நிலக்கடலை துருநோய் முதலியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. வேப்பம் எண்ணெய், வேப்பங்கொட்டை சாறு கரைசலை நெற்பயிரின் மீது தெளிப்பதால் நெல் துங்ரோ நோயை பரப்பும் பச்சை தத்துப்பூச்சியின் எண்ணிக்கை குறைகிறது.

மஞ்சள் தேமல் நோய்

வேப்பம் எண்ணெய் ஒரு சதவீதம் அடர்வில் நெல்பயிரில் தெளிப்பதால் மைக்கோபிளாஸ்மா என்ற உயிரியால் உண்டாகும் மஞ்சள் குட்டை நோயின் அளவு குறைகிறது. பச்சை பயிரில் வேப்பம் எண்ணெயை 3 சதவீதம் தெளித்து மஞ்சள் தேமல் நோய் பரவுவதை குறைக்கலாம். வேப்பம் எண்ணெய், வேப்பங்கொட்டை சாறு தெளிப்பதால் நெல்லில் இலை உறை அழுகல், இலை உறை கருகல், பாக்டீரியா இலை கருகல், துங்ரோ நோய்களின் தாக்குதல் குறைகிறது.

மேற்கண்ட தகவலை கொடுமுடி வேளாண்மை உதவி இயக்குனர் யசோதா தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்