பொதுமக்கள் துரத்தியதால் ரூ.1½ லட்சம், நகையை வீசிச்சென்ற கொள்ளையர்கள்

விழுப்புரத்தில் வீடு புகுந்து திருடியவர்களை பொதுமக்கள் துரத்தியதால் ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் நகையை வீசிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர்

Update: 2022-11-27 18:45 GMT

விழுப்புரம்

வீடுகளில் கொள்ளை

விழுப்புரம் பாண்டியன் நகர் 2-வது தெருவில் நேற்று மாலை 2 மர்ம நபர்கள் மோட்டர் சைக்கிளில் நோட்டமிட்டுக்கொண்டே உலா வந்தனர். பின்னர் அவர்கள், பிரபு என்பவரது வீட்டில் ¼ பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம், கிருஷ்ணநாராயணன் என்பவரது வீட்டில் ரூ.11 ஆயிரம் ரொக்கம் மற்றும் ½ பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

இதனை தொடர்ந்து அதே தெருவில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றனர். இவர்கள் மீது சந்தேகம் அடைந்து அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பினர். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் மர்ம நபர்களை பிடிப்பதற்காக துரத்தினர்.

நகை-பணத்தை வீசினர்

உடனே இருவரும் அங்கிருந்து தலைதெறிக்க ஓடி, அங்கு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் புறப்பட்டனர். இருப்பினும் பொதுமக்கள் துரத்தியதால், நகை மற்றும் பணம் வைத்திருந்த பையை வீசி விட்டு கொள்ளையர்கள் வேகமாக சென்று விட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீடுகளை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

பரபரப்பு

மேலும் கொள்ளையர்கள் விட்டு சென்ற பையை கைபற்றிய போலீசார் அதை சோதனை செய்தபோது உள்ளே ரூ.1½ லட்சம் ரொக்கம் மற்றும் நகை, கவரிங் நகைகள் ஆகியவை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இவை வீடுகளில் கொள்ளையடித்ததாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பின்னர் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை-பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்