மோட்டார் சைக்கிள்களில் தப்பியபோது விபத்தில் சிக்கிய கொள்ளையர்கள்

நெல்லையில் பஸ் கண்டக்டர் வீட்டில் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு மோட்டார்சைக்கிள்களில் தப்பிய கொள்ளையர்கள் விபத்தில் சிக்கினார்கள். இதில் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-01-26 20:38 GMT

சிகிச்சை பெற்று வரும் முத்து என்ற கோடா

நெல்லை பாளையங்கோட்டை-தூத்துக்குடி ரோட்டில் கே.டி.சி. நகர் அருகே உள்ள வ.உ.சி. நகர், ஜான்சி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 44). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு ராமசாமி, தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வீட்டில் சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென 5 பேர் கொண்ட கும்பல் இவரது வீட்டுக்குள் புகுந்தது. அந்த கும்பல் கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை காட்டி கூச்சலிடக்கூடாது என்று மிரட்டினர்.

அதை தொடர்ந்து வீட்டில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான 50 பவுன் தங்க நகைகளை அள்ளினார்கள். போலீசாருக்கு தகவல் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக ராமசாமி வீட்டில் இருந்த செல்போன்களையும் பறித்துக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்தனர். கொள்ளை சம்பவத்தை துணிகரமாக அரங்கேற்றிய பின்னர் அந்த கும்பல் வீட்டில் இருந்து வெளியேறினார்கள். அதை தொடர்ந்து அங்கு தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேரும் ஏறி புறப்பட்டனர். அப்போது வேலை முடிந்து ராமசாமியின் மனைவி வீடு திரும்பினார். தங்களது வீட்டில் இருந்து கொள்ளை கும்பல் வெளியே தப்பி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினரை உஷார்படுத்தி கொள்ளையர்களை தேடி பார்த்தனர். ஆனால் கொள்ளையர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவுப்படி, துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் ஆகியோர் தலைமையில் போலீஸ் படையினர் ஜான்சி நகருக்கு விரைந்து சென்றனர். அங்கு ராமசாமியின் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் பற்றி கேட்டறிந்தனர். பின்னர் தடயவியல் நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு கொள்ளை கும்பலின் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த மோப்ப நாய் தூத்துக்குடி ரோடு வரை ஓடிச்சென்றது.

இதையடுத்து நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் தப்பிய கும்பல் மின்னல் வேகத்தில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பாலத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் நிைல தடுமாறிய ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சாலையோர தடுப்பில் மோதி கீழே விழுந்தனர். இதில் அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது. ஒருவர் பலத்த காயத்துடன் இருந்தார். இதன்பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்தவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மற்ற 2 பேரும் லேசான காயத்துக்கு சிகிச்சை பெற்று ஆஸ்பத்திரியில் காத்திருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பலத்த காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பவர் தூத்துக்குடி கோரம்பள்ளம் அருகே உள்ள சோரீஸ்புரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காட்டுராஜா மகன் முத்து என்ற கோடா (வயது 22) என்பதும், அவருடன் வந்தவர்கள் தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜீவ்நகரை சேர்ந்த ரவி மகன் கண்ணன் (20), பாரதிநகரை சேர்ந்த விஜயராஜ் மகன் கிஷோர் டேனியல் (20) என்பதும் தெரியவந்தது.

இதில் முத்து என்ற கோடா, கண்ணன் ஆகிய 2 பேரும் ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் போலீசில் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கடந்த 5-ந் தேதி முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு உதவி கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணைபத்திரம் எழுதி கொடுத்து இருப்பதும் தெரியவந்தது.

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசார் அவர்களை செல்போனில் படம் பிடித்து பாளையங்கோட்டை போலீசுக்கு அனுப்பினர். இதனை பார்த்துக்கொண்டு இருந்த கண்ணன், கிஷோர் டேனியல் ஆகிய 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென தப்பி ஓடினர். இதனால் போலீசார் அவர்களை தொடர்ந்து விரட்டினர். அப்போது கண்ணன் மட்டும் பிடிபட்டதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய கிஷோர் டேனியல் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த தூத்துக்குடி லயன்ஸ்டவுனை சேர்ந்த ஜெசிங்டன் மகன் சிலுவை (25) ஆகியோரை தேடினர்.

தொடர்ந்து தூத்துக்குடியில் பதுங்கி இருந்த கிஷோர் டேனியல், சிலுவை ஆகிய 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் 3 பேரும் நெல்லை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மயக்க நிலையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முத்து என்ற கோடாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய சாம் என்ற சம்சுதீன் என்பவர் நகைகளுடன் நாகர்கோவிலுக்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, அவரை பிடிக்க தனிப்படை போலீசார் நாகர்கோவிலுக்கு விரைந்து உள்ளனர். இந்த சம்பவம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்