சாலையை அகலப்படுத்த வேண்டும்
அய்யன்கொல்லியில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பந்தலூர்
பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பஜார் உள்ளது. இந்த பகுதியில் பந்தலூரில் இருந்து ஏலமன்னா, மழவன் சேரம்பாடி வழியாக சுல்த்தான்பத்தேரிக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த வழியாக தமிழக, கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பள்ளி வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் வந்து செல்கின்றன.
இதனால் 2 மாநில பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அய்யன்கொல்லிக்கு வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் அய்யன்கொல்லியில் உள்ள பயணிகள் நிழற்குடை முதல் கொளப்பள்ளி செல்லும் சாலையோரம் வரை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. மேலும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையை அகலப்படுத்த ஊராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக சாலையோரம் குழி தோண்டப்பட்டது. பின்னர் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. எனவே, சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.