சாலையை சீரமைக்க வேண்டும்; பஞ்சாயத்து கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு
சாலையை சீரமைக்க வேண்டும் என பஞ்சாயத்து கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கடையம்:
கடையம் யூனியனுக்கு உட்பட்ட 23 பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் கோவிந்தபேரி டி.கே.பாண்டியன், செயலாளர் பூமிநாத் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் பொன்ஷீலா பரமசிவன், சாருகலா, கணேசன், அ.தி.மு.க. பிரமுகர் ராமதுரை ஆகியோர் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறிஇருப்பதாவது:-
திருமலையப்பபுரத்தில் இருந்து கோவிந்தபேரி செல்லும் தார்சாலையானது கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது சாலை மிகவும் மோசமடைந்து காணப்படுகிறது. இந்த வழியே தினமும் அரசு பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் இந்த வழியே திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம், வீராசமுத்திரம், மந்தியூர், கோவிந்தபேரி உள்பட சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள் சென்று வருகின்றனர். இந்த நிலையில் சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இச்சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.