கோவிலுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு

கும்மம்பட்டியில் கோவிலுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2023-08-28 20:15 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதன்படி, ஆத்தூர் தாலுகா கும்மம்பட்டி கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கும்மம்பட்டியில் குடகனாற்றுக்கரையோரத்தில் அமைந்துள்ள பெரியாண்டவர் கோவிலுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து பக்தர்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு பள்ளம் தோண்டியுள்ளனர்.

இதனால் கோவிலுக்கு சாமி தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கோவில் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பர்தா அணிந்து செல்ல தடையில்லை என கலெக்டர் அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆக்கிரமிப்பு

தமிழர் தேசம் கட்சியின் மாவட்ட செயலாளர் விஜய் அம்பலம் கொடுத்த மனுவில், முத்தரையர் சமூகத்திற்கு கல்வி, அரசு வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்டு இருந்தார். வேடசந்தூர் தாலுகா மோர்ப்பட்டி கிராம மக்கள் சார்பில் கொடுத்த மனுவில், ஊர் பொது இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அகரத்தை அடுத்த சத்திரப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில், கருப்பணசாமி கோவில் திருவிழாவின் போது, மழையில் கரையும் வகையில் செய்து வைக்கப்பட்ட முத்தாலம்மன் சிலையை மர்ம நபர்கள் திருடிச்சென்று தடுப்பணையில் வீசிச்சென்றுவிட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

320 மனுக்கள்

மேற்கண்ட மனுக்கள் உள்பட மொத்தம் 320 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதையடுத்து ஆஸ்திரேலியாவில் நடந்த சர்வதேச அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் ஆர்ட்ஸ்டிக் போட்டியில் தங்கம், வெண்கலப்பதக்கம் வென்ற திண்டுக்கல் அனுகிரகா பள்ளி மாணவி உத்ரா ராஜன்.

புதுச்சேரியில் நடந்த தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி, குருமுகி வித்யாஷ்ரம் பள்ளி மாணவிகள் மதுயாழினி, அஸ்விதா, பிரமிதா ஆகியோரை கலெக்டர் பாராட்டினார். கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்