வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக காணப்படும் அவலம்
திருவாரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இந்த சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;
திருவாரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லும் சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலகம்
திருவாரூரில் விளமல்-மன்னார்குடி சாலையில் ஆர்.வி.எல். நகர் பகுதிக்கு செல்லும் வழியில் வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட மருத்துவ கிடங்கு மற்றும் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் உள்ளன. இதனால் நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்ற பகுதியாக இருந்து வருகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு படித்த மாணவ-மாணவிகள் பதிவு, பதிவு மூப்பு போன்ற பணிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்து செல்கின்றனர்.
இத்தகைய பிரதான சாலையில் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்துடன் கிடங்கு அமைந்துள்ளது. இதனால் தினசரி ஏராளமான லாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள மது ஆலைகளில் இருந்து மதுபாட்டிகளை ஏற்றி கொண்டு திருவாரூர் டாஸ்மாக் கிடங்கிற்கு வந்து செல்கிறது.
சேறும், சகதியுமான சாலை
இந்த லாரிகள் அனைத்தும் கிடங்கு செல்லும் சாலையில் அணிவகுத்து நிற்பது வழக்கம். மேலும் மருத்துவ கிடங்கிற்கும் மருந்துகளை ஏற்றி கொண்டு லாரிகள், வேன்கள் வருவது வழக்கம். இதனால் கனரக வாகனங்கள் அதிகம் சென்றுவருவதால் இந்த சாலை மிகவும் பழுதடைந்து மிக பெரிய பள்ளங்களுடன் காட்சி அளித்து வந்தது. தற்போது மழை பெய்து வருவதால் இந்த சாலை, சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசச்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த சாலையில் நாள்தோறும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து விபத்துள்ளாகும் சம்பவமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே பயன்படுத்த முடியாத அளவு சேறு, சகதியுமாக உள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தார்ச்சாலையாக அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.