மயானத்துக்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும்

கொள்ளிடம் அருகே அரசூரில் மயானத்துக்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-12 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே அரசூரில் மயானத்துக்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயான சாலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள அரசூர் ஊராட்சியை சேர்ந்த கன்னி கோவில் தெரு,புளியந்தோப்பு தெரு மற்றும் மேல தெரு ஆகிய தெருக்களில் 300-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த தெருக்களிலிருந்து மயானத்துக்கு செல்லும் 300 மீட்டர் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டு சிமெண்டு சாலையாக மாற்றப்பட்டது. ஆனால் காலப்போக்கில் முறையான பராமரிப்பில்லாததால் இந்த சாலை மண் சாலையை போன்று காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலை ஆக்கிரமிக்கப்பட்டு அகலம் குறைந்து தற்போது ஒத்தையடி பாதையாக மாறிவிட்டது.

இந்த மயானத்தை தொடர்ந்து மேலும் 50 மீட்டர் சென்றால் அரசூர் கிராமத்தில் வசிக்கும் மற்றொரு பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு செல்வதற்கும் சாலை இல்லை. சாலை மேம்படுத்தாமல் உள்ளதால் ஒத்தையடி பாதையாக உள்ள இந்த சாலையில் இறந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்கள் மிகவும் சிரமத்துடன் தோளில் சுமந்து சென்று இறுதிச்சடங்குகள் செய்து வருகின்றனர்.

கலெக்டரிடம் மனு

இதுகுறித்து அரசூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜேந்திரன் கூறுகையில், இங்குள்ள பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்களுக்கென அமைந்துள்ள மயானத்துக்கு செல்லும் வகையில் 10 வருடங்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் இருந்து வருகிறது. மேலும் இந்த மயான சாலையின் அகலம் ஆக்கிரமிப்பாளர்களால் குறுகிய சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை தோளில் மட்டுமே சுமந்து செல்ல முடியும். அப்படி சுமந்து செல்கின்ற பொழுது மிகவும் சிரமத்துடன் சுமந்து செல்கின்றனர். மேலும் இந்த மயான சாலையை புதர்கள் வளர்ந்து மூடியுள்ளன. எனவே அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் நலன் கருதி மயான சாலையை முன்பு எந்த அளவுக்கு அகலமாக இருந்ததோ,அந்த அளவுக்கு அகலப்படுத்தவும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரு மயானங்களுக்கும் மயான ஏரியூட்டு கொட்டகை அமைத்து தர வேண்டும். நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தும் வகையில் கைப்பம்பு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்