ஆயர்பாடியில் இருந்து தச்சம்பட்டறை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்-ஊராட்சி மன்ற தலைவர் கோ.ஆனந்திகோவிந்தன் கோரிக்கை

ஆயர்பாடியில் இருந்து தச்சம்பட்டறை செல்லும் தார் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் கோ.ஆனந்திகோவிந்தன் கோரிக்கை வைத்து உள்ளார்.

Update: 2023-03-20 19:09 GMT

ராணிப்பேட்டை

ஆயர்பாடியில் இருந்து தச்சம்பட்டறை செல்லும் தார் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் கோ.ஆனந்திகோவிந்தன் கோரிக்கை வைத்து உள்ளார்.

ஆயர்பாடி ஊராட்சி

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆயர்பாடி ஊராட்சி மன்றம் உள்ளது. இதில் ஆயர்பாடி, அமராபுரம் இருளர் காலனி, ஆயர்பாடி காலனி ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக அதே பகுதியை சேர்ந்த கோ.ஆனந்திகோவிந்தன் உள்ளார்.

ஊராட்சியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

ஆயர்பாடி குறுக்குபாட்டை தெருவில் ரூ.13 லட்சத்தில் ஒரடுக்கு ஜல்லி சாலை, ஈஸ்வரன் கோவில் தெருவில் ரூ.80 ஆயிரத்திலும், அமராபுரம் இருளர் காலனியில் ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்திலும் சிமெண்டு சாலை, ஆயர்பாடியில் ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்தில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் கிடங்கு, கால்நடை மருத்துவமனையில் ரூ.3 லட்சத்து 99 ஆயிரத்தில் பேவர் பிளாக் சாலை, அமராபுரம் இருளர் காலனியில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய், ஆயர்பாடி குப்பை சேகரிக்கும் தொட்டியில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தில் பக்கவாட்டு தடுப்புச்சுவர், ஆயர்பாடி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.3 லட்சத்தில் பைப்லைன், ரூ.31 ஆயிரத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏணி, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பில் புதிய தெரு உருவாக்கப்பட்டு சிமெண்டு சாலை உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

சாலை சீரமைக்க வேண்டும்

அமராபுரம் இருளர் காலனியில் ரூ.2½ லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடக்கிறது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் மூலம் 6 பயனாளிகளுக்கு இலவச வீடு வழங்கப்பட்டு உள்ளது.

ஊராட்சியில் 4,500 பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு, போதைப்பொருள் தடுப்பு, கழிப்பறையின் அவசியம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தட்டி போர்டுகளை கையில் ஏந்தியவாரும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ஒவ்வொரு வீடுகளுக்கு வழங்கியும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு உள்ளது.

ஆயர்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கழிப்பிடம், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், தபால் அலுவலகத்திற்கு தனி கட்டிடம், உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடம், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், ஆதிதிராவிடர் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம், ஆயர்பாடி ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களுக்கும் சிமெண்டு சாலைகள் மற்றும் ஆயர்பாடியில் இருந்து தச்சம்பட்டறை செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக வாகன போக்குவரத்திற்கு சரியில்லாத வகையில் உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் அந்த சாலையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதன்மை ஊராட்சியாக...

ஆயர்பாடி ஆதிதிராவிடர் காலனி, அமராபுரம் இருளர் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஆயர்பாடியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

நான் தினமும் ஊராட்சி பகுதிகளில் மக்களுக்கு அடிப்படை தேவைகள் என்ன என்பதை அறிந்து அதை உடனுக்குடன் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன். தடையில்லாமல் குடிநீர் கிடைக்க புதிய ஆழ்துளை கிணறுகள், குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளில் புதிய குழாய்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மின் விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிய மின் விளக்குகள் பொருத்தவும், பழுதடைந்த மின் விளக்குகளை உடனுக்குடன் மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆயர்பாடி ஊராட்சியை அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் முதன்மையான ஊராட்சியாக மாற்ற அமைச்சர் ஆர்.காந்தி, முனிரத்தினம் எம்.எல்.ஏ. ஆகியோரின் ஒத்துழைப்போடு காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எம்.பாலாஜி ஆலோசனையுடன் காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் அனிதா குப்புசாமி, துணைத்தலைவர் முனியம்மாள் கணேசன், மாவட்ட கவுன்சிலர் ந.சக்தி, ஒன்றிய கவுன்சிலர் கே.தீபா கார்த்திகேயன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் எம்.கீதாமணி, வார்டு உறுப்பினர்கள் இ.இந்துமதி ஏகநாதன், ஜி.தேவிகுரு, எம்.வரலட்சுமிமோகன், கே.நாகராஜன், டி.மணிகண்டன், ஊராட்சி செயலாளர் எம்.மோகன் ஆகியோருடன் இணைந்து செயல்படுவேன்.

இவ்வாறு ஊராட்சி மன்ற தலைவர் கோ.ஆனந்தி கோவிந்தன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்