வருவாய்த்துறையினர் 2-வது நாளாக போராட்டம்

துணை தாசில்தார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து வருவாய்த்துறையினர் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வருகிற 25-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய பணி புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Update: 2023-10-20 19:55 GMT

துணை தாசில்தார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து வருவாய்த்துறையினர் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வருகிற 25-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய பணி புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

துணை தாசில்தார் மீது தாக்குதல்

திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ்ரோட்டில் செயல்பட்டு வந்த நிறுவனத்தினர் தங்களது சொத்துகளை அடமானம் வைத்து வங்கியில் கடன் வாங்கிய நிலையில், கடனை அடைக்காததால் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வீட்டை ஜப்தி செய்வதற்காக காஜாமலை பகுதிக்கு சென்ற துணை தாசில்தார் பிரேம்குமார் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தினார்கள்.

இதில் படுகாயம் அடைந்த துணைதாசில்தார் பிரேம்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் துணை தாசில்தார் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் நேற்று முன்தினம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய்த்துறையினர் போராட்டம்

இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அனைவரும் பணியை புறக்கணித்து விட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

மாநிலம் தழுவிய பணி புறக்கணிப்பு

வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், துணை தாசில்தார் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை திருப்தி அளிக்காததால் ஒட்டு மொத்த கூட்டமைப்பு சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

துணை தாசில்தார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து வழக்கு நடத்துவது, 21-ந் தேதி (சனிக்கிழமை) முதல் 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை உள்ள விடுமுறை நாட்களில் வருவாய்த்துறையை சேர்ந்த அனைத்து நிலை அலுவலர்களும் எவ்வித அலுவலக பணியையும் செய்வதில்லை எனவும், மேற்படி சம்பவத்தை கண்டித்து 25-ந் தேதி (புதன்கிழமை) முதல் மாநிலம் தழுவிய வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பு சார்பில் பணிபுறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

கைது

இந்நிலையில், துணை தாசில்தாரை தாக்கிய சம்பவம் தொடர்பாக ரங்கநாதனை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்