சிறுவன் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

திராவகம் கலந்த குளிர்பானம் குடித்ததில் சிறுவன் இறந்த விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது. 6 நாட்களுக்கு பிறகு உடலை வாங்கி அடக்கம் செய்தனர்.

Update: 2022-10-21 21:07 GMT

களியக்காவிளை:

திராவகம் கலந்த குளிர்பானம் குடித்ததில் சிறுவன் இறந்த விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது. 6 நாட்களுக்கு பிறகு உடலை வாங்கி அடக்கம் செய்தனர்.

சிறுவன் சாவு

களியக்காவிளை அருகே மெதுகும்மல் நுள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுனில். வெளிநாட்டில் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் அஸ்வின் (வயது 11), அதங்கோடு பகுதியில் உள்ள மாயா கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 24-ந் தேதி அன்று பள்ளிக்கூட பகுதியில் அதே பள்ளி சீருடை அணிந்த நபர் ஒருவர், அஸ்வினுக்கு திராவகம் கலந்த குளிர்பானத்தை கொடுத்ததாக தெரிகிறது.

இதனை குடித்த அஸ்வின் படிப்படியாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நெய்யாற்றின்கரை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் கடந்த 17-ந் தேதி பரிதாபமாக இறந்தார்

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

இதுதொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். திராவகம் கலந்து குளிர்பானம் கொடுத்த நபர் யாரென்பதை போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே குற்றவாளிகளை கைது செய்யக்கோரி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள், சக மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இதற்கிடையே சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. சிறுவன் சாவு விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனால் சிறுவன் உடல் பிணவறையிலேயே இருந்தது. பின்னர் கலெக்டர் அரவிந்த், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.

அதன்படி 6 நாட்களுக்கு பிறகு நேற்று மாலையில் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட உறவினர்கள் இறுதி சடங்கு நிறைவேற்றி மெதுகும்மல் பகுதியில் அடக்கம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்