விழுப்புரத்தில் பரபரப்புபல்பொருள் அங்காடி ஊழியர் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் மறியல்கடைகள் அடைப்பு; கலெக்டர் அலுவலகத்தை வணிகர்கள் முற்றுகை

விழுப்புரத்தில் நடந்த பல்பொருள் அங்காடி ஊழியர் கொலைக்கு நீதி கேட்டு, அவருடைய உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். வணிகர்களும் கடைகளை அடைத்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-30 18:45 GMT

கடைகள் அடைப்பு

விழுப்புரத்தில் பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹீம் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரியும் நேற்று வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஜவுளிக்கடைகள், நகை கடைகள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும், ஓட்டல்களும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. மருத்துவமனைகளும், மருந்து கடைகளும் மட்டும் வழக்கம்போல் திறந்திருந்தன. மாலை 4 மணிக்கு பிறகு படிப்படியாக கடைகள் திறக்கப்பட்டு, இயல்பு நிலை திரும்பியது.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

முன்னதாக, வணிகர் சங்க தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் வணிகர்கள் எம்.ஜி.சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு கலெக்டர் அலுவலகத்தை அவர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து வணிகர்கள், கொலையாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், விழுப்புரத்தில் ரவுடியிசத்தை தடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பழனியிடம் மனு கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து அவர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

மறியல் போராட்டம்

இதனிடையே நேற்று தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, இது தனிப்பட்ட குடும்ப பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட தகராறின்போது அங்கு தடுக்க வந்த நபர் துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருப்பதாக பேசினார். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த வணிகர் சங்கத்தினர் மற்றும் ஜமாத் அமைப்பினர், இப்ராஹீமின் உறவினர்கள் 200-க்கும் மேற்பட்டோர், விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு தவறான தகவலை போலீசார் அளித்ததாகவும், அவர்களை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக நான்குமுனை சந்திப்பில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

டி.ஐ.ஜி. பேச்சுவார்த்தை

உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பியதோடு, இப்ராஹீமின் மரணத்திற்கு நீதி கேட்டும், இதன் விசாரணையை நியாயமான முறையில் நடத்தக்கோரியும், வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக்கோரியும், கஞ்சா போதையில் கொலை செய்த இருவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இப்ராஹீமின் குடும்பத்திற்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றித்தருவதாகவும் அவர் உறுதியளித்தார். இதனை ஏற்ற அவர்கள் அனைவரும் மதியம் 1 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு அப்பகுதியில் வாகன போக்குவரத்து சீரானது.

போக்குவரத்து பாதிப்பு

இதனிடையே இப்ராஹீமின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விழுப்புரம் எம்.ஜி.சாலைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு உறவினர்கள், வணிகர் சங்கத்தினர் அஞ்சலி செலுத்தியதோடு அந்த உடலை சாலையில் வைத்து சுமார் ½ மணி நேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியலால் விழுப்புரம்-புதுச்சேரி சாலை மற்றும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்