மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

பாளையங்கோட்டையில் மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-08 20:08 GMT

பாளையங்கோட்டை அருகே திருமலைகொழுந்துபுரத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 50). கட்டிட தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். செல்லத்துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் செல்லத்துரை மகள் ஜெனிபர் (22) மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று செல்லத்துரையின் உடலை வாங்க மறுத்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ''செல்லத்துரையின் உயிரிழப்பிற்கு வீட்டின் உரிமையாளர், கட்டிட ஒப்பந்ததாரர், என்ஜினீயர் ஆகியோரின் அலட்சியப்போக்கே காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த செல்லத்துரை குடும்பத்தினருக்கு ரூ.6 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். அதுவரை அவரது உடலை வாங்க மாட்டோம்'' என்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து பாளையங்கோட்டை நூலகம் அருகிலும் செல்லத்துரையின் உறவினர்கள் சாலைமறியலுக்கு முயன்றனர். அவர்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து செல்லத்துரையின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து அவர்களிடம் செல்லத்துரையின் உடல் ஒப்படைக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்