இறந்தவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்

இறந்தவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியல்

Update: 2023-05-27 20:03 GMT

அம்மாப்பேட்டை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறின் போது இறந்தவரின் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது கற்களை வீசியதில் பஸ் கண்ணாடி-போலீஸ் ஜீப் சேதம் அடைந்தன.

இருதரப்பினர் இடையே தகராறு

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே கீழகோவில்பத்து கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த சீனிவாசன்(வயது 53), என்பவர் நேற்று காலை இறந்து விட்டார். இதனையடுத்து வடபாதி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தெரு வழியாக நேற்று மாலை சீனிவாசன் உடலை அவரது உறவினர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றுள்ளனர்.

அப்போது வடபாதி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ஒரு தரப்பினர் இங்கு திருமண வரவேற்பு விழா நடப்பதால் உடலை வேறு வழியாக செல்ல கூறியுள்ளனர். அதற்கு அவரது உறவினர்கள் சீனிவாசன் உடலை அந்த தெரு வழியாக தான் எடுத்து செல்வோம் என கூறி தகராறில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் இந்த வழியாக எடுத்து செல்ல கூடாது என கூறி சரக்கு வேனால் சாலையை மறித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் உறவினர்களுக்கும், வடபாதி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

சாலைமறியல்

அப்போது இருதரப்பினரும் கற்களையும், கட்டையையும் வீசி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் சீனிவாசன் உடலை வைத்து அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பஸ் கண்ணாடி-போலீஸ் ஜீப் சேதம்

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சீனிவாசன் உடலை வடபாதி ஆதிதிராவிடர் தெரு வழியாகத்தான் இடுகாட்டிற்கு எடுத்து செல்வோம் என கூறி அவரது உறவினர்கள் போலீசாருடனும் தகராறில் ஈடுபட்டனர்.

இந்த தகராறின்போது அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழனின் ஜீப் மீீது கற்களை வீசி தாக்கியதில் ஜீப் சேதம் அடைந்தது. மேலும் அங்கு நின்ற தனியார் பஸ் கண்ணாடியும் கல்வீச்சிம் சேதம் அடைந்தது. இதனால் அங்கு மேலும் போலீசார் மற்றும் அதிவிரைவுபடையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.

பேச்சுவார்த்தை

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பூர்ணிமா(பாபநாசம்), மகேஷ்குமார்(கும்பகோணம்), தஞ்சாவூர் சிறப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து வடபாதி ஆதிதிராவிடர் தெரு வழியாக சீனிவாசன் உடலை போலீஸ் பாதுகாப்புடன் அவரது உறவினர்கள் எடுத்து சென்று தகனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்