வீட்டுமனை குலுக்கல் திட்டத்தில் பணம் செலுத்தியவருக்கு மனை வழங்காத ரியல் எஸ்டேட் உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டும்:நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
வீட்டுமனை குலுக்கல் திட்டத்தில் பணம் செலுத்தியவருக்கு மனை வழங்காத ரியல் எஸ்டேட் உரிமையாளர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன், விழுப்புரம் தனலட்சுமி கார்டன் பகுதியில் அலுவலகம் வைத்து ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கி விழுப்புரம் அருகே கப்பியாம்புலியூர் பகுதியில் புதியதாக வீட்டுமனை பிரிவு ஏற்படுத்தினார். கடந்த 2014-ம் ஆண்டு, மாதாந்திர தவணையில் வீட்டுமனை குலுக்கல் திட்டத்தில் மனை விற்பதாக விளம்பரப்படுத்தினார். அதன் மூலம் விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், தவணை முறையில் வீட்டுமனை குலுக்கல் திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். அவர் மாத தவணையாக ரூ.1,250 வீதம் கடந்த 6.12.2014 முதல் 20.9.2016 வரை ரூ.27,500 செலுத்தி இருந்தார். ஆனால் ரியல் எஸ்டேட் உரிமையாளர் பாலமுருகன் கூறியபடி, குலுக்கல் ஏதும் நடத்தாமல், மனை வழங்காமலும் ஏமாற்றி வந்ததோடு திடீரென விழுப்புரத்தில் உள்ள அலுவலகத்தையும் மூடிவிட்டு சென்றார். பின்னர் திருக்கோவிலூரில் உள்ள பாலமுருகன் வீட்டிற்கு சென்று சிவக்குமார் கேட்டபோதிலும் மனையும் வழங்காமல், பணத்தையும் வழங்காமல் பாலமுருகன் ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிவக்குமார், நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகி வளவனூர் சுப்பிரமணியன் மூலம், விழுப்புரம் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், பாதிக்கப்பட்ட சிவக்குமார் தரப்புக்கு, அவர்கள் செலுத்திய ரூ.27,500 தவணை தொகையும், அதற்கு 9 சதவீதம் வட்டியுடன் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும், அவரது மன உளைச்சல், கால விரயத்துக்காக ரூ.30 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கவும் பாலமுருகன் தரப்புக்கு உத்தரவிட்டார்.