ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் பணியை புறக்கணித்து போராட்டம்
ரேஷன்கடை பணியாளர் சங்க மாநில தலைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பணியை புறக்கணித்து சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில தலைவர் மீது தாக்குதல்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் ராஜா. இவர் தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்க மாநில தலைவராக உள்ளார். ஜெயச்சந்திரன் ராஜா கடந்த மாதம் சாலையில் நடந்து சென்றபோது மர்மகும்பல் சரமாரியாக தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினர். ஜெயச்சந்திரன் ராஜா மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி ரேஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கடந்த வாரம் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து போலீசார் 48 மணிநேரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் நேற்று முதல் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்றது.
பணியை புறக்கணித்து போராட்டம்
வேலூர் மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம் காரணமாக சில பகுதிகளில் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தன. அதனால் ரேஷன்கடைக்கு அரிசி, சர்க்கரை, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பல இடங்களில் குறைவான ஊழியர்களுடன் ரேஷன் கடைகள் இயங்கின.
இதுகுறித்து சங்க மாநில செயலாளர் காட்பாடியை சேர்ந்த செல்வம் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள் ரேஷன்கடை பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் சில இடங்களில் கடைகள் மூடப்பட்டு, வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரன் ராஜா மீது தாக்குதல் நடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அதனால் போராட்டம் கைவிடப்பட்டது. ரேஷன்கடை பணியாளர் சங்க நிர்வாகிகள் பிற்பகலில் ரேஷன் கடைகளுக்கு சென்று தங்கள் பணிகளை தொடர்ந்தனர் என்று தெரிவித்தார்.