மூடி கிடக்கும் அரசு கட்டிடத்துக்கு ரேஷன் கடையை மாற்ற வேண்டும்

கலசபாக்கம் அருகே பல ஆண்டுகளாக மூடி கிடக்கும் அரசு கட்டிடத்துக்கு ரேஷன் கடையை மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-10-10 16:35 GMT

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே பல ஆண்டுகளாக மூடி கிடக்கும் அரசு கட்டிடத்துக்கு ரேஷன் கடையை மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டான்காப் கட்டிடம்

கலசபாக்கம் ஒன்றியம் லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கநல்லூர் கிராமத்தில் டான்காப் மூலம் சுமார் 30 அடி நீளம் 45 அடி அகலத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டது.

இதன் மூலம் சுற்று வட்டார பகுதிகளான லாடவரம், கோவூர் கார்கோணம், அணியாலை, சாலையனூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் வேர்க்கடலைகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.

இதனை டான்காப் ஊழியர்கள் வாங்கி குடோனில் சுமார் 100 மூட்டைகள் வரை இருப்பு வைத்து அதனை திருவண்ணாமலைக்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு கட்டிடம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.

மூடப்பட்டது

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டான்காப் செயல்படாமல் போன காரணத்தால் இக்கட்டிடம் அன்று முதல் எந்த பயன்பாட்டிற்கும் இல்லாமல் மூடியே வைக்கப்பட்டுள்ளன.

இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

கெங்கநல்லூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள டான்காப் கட்டிடம் மிகவும் தரமாக கட்டப்பட்டுள்ள காரணத்தால் இன்று வரை எந்த ஒரு சேதமும் இல்லாமல் பலமாக உள்ளது.

எனவே எங்கள் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பகுதி நேர ரேஷன் கடையின் மூலமே பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

உணவு பொருட்கள் வீண்

ரேஷன் கடை கட்டிடம் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தால் மிகவும் பழுதடைந்து விட்டது.

இதனால் இக்கட்டிடத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே சென்று அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற உணவு பொருட்கள் நனைந்து வீணாகின்றன.

இதனால் பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் எங்கள் கிராமத்திலே பயன்பாட்டில் இல்லாமல் உள்ள டான்காப் கட்டிடத்தை பராமரித்து பகுதி நேர ரேஷன் கடையை அந்த கட்டிடத்திற்கு மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் உணவு பொருட்கள் பாதுகாப்பாக பொதுமக்களுக்கு கிடைக்கும்.

மேலும் பயனில்லாமல் மூடி கிடக்கும் கட்டிடத்தையும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். எனவே இது சம்பந்தமாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிதி தேவைப்படும்

மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் எல்.எஸ்.குமரவேல் கூறுகையில், எங்கள் ஊராட்சியில் பல ஆண்டுகளாக அரசு கட்டிடம் பயன்பாட்டிற்கு இல்லாமல் மூடியே கிடப்பதால் கட்டிடத்தின் உறுதித்தன்மை சீர்குலைந்து வீணாகிவிடும்.

மேலும் இந்த அளவு கட்டிடத்தை தரமானதாக தற்போது கட்டுவது என்றால் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சத்திற்கு மேல் நிதி தேவைப்படும்.

இதனால் கட்டிடத்தை பராமரித்து இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரேஷன் கடை அல்லது நேரடி நெல் கொள்முதல் நிலையமாக அமைத்து பயன்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

லாடவரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரியங்கா கூறுகையில், தற்போது உள்ள நிதி நிலைமையில் மூடிக்கிடக்கும் அரசு கட்டிடங்களை புதுப்பித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

பல ஆண்டுகளாக கிராமத்தில் உள்ள அரசு கட்டிடத்தில் அப்பகுதியில் பழுதடைந்துள்ள பகுதி நேர கூட்டுறவு ரேஷன் கடை அல்லது மருத்துவ சுகாதார வளாகம் அமைத்தால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்