ரேஷன்கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்
அசிக்காடு ஊராட்சியில் ரேஷன்கடை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குத்தாலம்:
அபாய நிலையில் ரேஷன் கடை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, அசிக்காடு ஊராட்சி அய்யனார் கோவில் தெருவில் ரேஷன்கடை உள்ளது. இந்த ரேஷன் கடை பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.தற்போது இந்த ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. தற்போது இந்த ரேஷன் கடை கட்டிடம் ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கிவருகிறது.
அகற்ற வேண்டும்
சேதமடைந்த ரேஷன்கடை அருகில் அசிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், நூலகம், அய்யனார் கோவில், அங்கன்வாடி மையம், புதுவாழ்வு திட்ட மையம் ஆகியவை உள்ளன. இந்த பகுதி வழியாக மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். ரேஷன் கடை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் இந்த வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து உயிர்பலி ஏற்படும் முன்பு சேதமடைந்த ரேஷன்கடை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.