மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கிய மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2022-11-01 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தீவிரம் அடைந்த பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நவம்பர் 1-ந்தேதி முதல் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதன்படி நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8.30 மணி வரை விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.காலை நேரத்தில் மழை பெய்ததால் வேலைக்கு செல்பவர்கள் அவதிப்பட்டனர். நேற்று பகல் முழுவதும் லேசான தூறல் மழை பெய்தது. விடிய, விடிய பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.அதிகபட்சமாக தரங்கம்பாடியில் 44 மில்லி மீட்டர் மழை பதிவானது.சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, கொள்ளிடம், கொண்டல், மாதானம், திருமுல்லைவாசல், ஆதமங்கலம், எடக்குடி வடபாதி, கதிராமங்கலம், காரைமேடு, திட்டை, தில்லைவிடங்கன் உள்ளிட்ட பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ஈசானிய தெரு, வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலைய வளாகம், ெரயில்வே ரோடு, கீழத்தெரு, விளக்குமுக தெரு, வள்ளுவர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

வடிகால் சேதமடைந்தது

இதேபோல் கதிராமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட செல்லமுத்த குமரன் நகர், வேலவன் நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள சாலைகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த மழைநீர் வடிகால் சேதமடைந்து மழைநீர் வடிய வழி இல்லாமல் சாலையிலேயே மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மழை அளவு

மயிலாடுது மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு(மில்லி மீட்டரில்) வருமாறு:- தரங்கம்பாடி-44, சீர்காழி-43, கொள்ளிடம்-24, மணல்மேடு -௧௨.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

தரங்கம்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவு ேநரங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று தரங்கம்பாடியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடல் அலை தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள பழைய அஸ்திவார தடுப்பு சுவர் தாண்டி எழுந்தது. கடல் சீற்றம் காரணமாக தரங்கம்பாடி குட்டியாண்டியூர், சந்திரபாடி, சின்னூர்பேட்டை, பெருமாள்பேட்டை, வெள்ளகோவில், புதுப்பேட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடந்த 2 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.இதனால் மீனவர்கள் தங்களின் படகுகளையும், வலை மற்றும் மீன் பிடி உபகரணங் களையும் பாதுகாப்பாக தரங்கம்பாடி துறைமுகத்திலும், மற்ற மீனவர்கள் அந்தந்த பகுதிகளிலும் வைத்து உள்ளனர். கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்