இடைவிடாது பெய்த சாரல் மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் இடைவிடாது சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இடைவிடாது சாரல்மழை பெய்து கொண்டே இருந்தது.
சாரல்மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு எதிர்பார்க்காத வகையில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. ஆனால் அனைவரும் எதிர்பார்த்த வடகிழக்கு பருவமழை ஒருசில நாட்கள் மட்டும் லேசாக பெய்த நிலையில் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. வைகை தண்ணீர் பாய்ந்த பகுதிகளில் மட்டும் நீர் நிலைகள் நிறைந்து விவசாயம் நன்றாக உள்ளது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து இலங்கை கடற்கரையை ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என்பதால் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று முன்தினம் இரவு சாரல் மழையாக பெய்தது. தொடர்ந்து இரவில் பல பகுதிகளில் தொடங்கி நேற்று முழுவதும் மழை பெய்துகொண்டே இருந்தது. ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழையாகவும், பல பகுதிகளில் இடைவிடாமலும் பெய்தது.
மாணவர்கள் அவதி
இந்த மழைகாரணமாக தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் சூழ்ந்தது. மழையின்றி பனியின் தாக்கத்தில் இருந்து வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு இந்த மழை பயன்உள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. காலம் தாழ்ந்து பெய்த மழையால் நெல் விவசாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்றாலும் வைகை தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்துள்ள பகுதிகளுக்கு இந்த மழை பயன் உள்ளதாக இருக்கும் என்றும், இதுதவிர, மிளகாய், மல்லி போன்றவற்றிற்கும் பயன்உள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மழையுடன் கடும் குளிர் காற்றும் வீசியதால் மிகவும் குளிர்ந்த நிலை நிலவியது. குறிப்பாக ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று பகல் முழுவதும் இடைவிடாமல் மழை கொட்டியது. இதனால் ராமேசுவரம் பகுதி மக்கள் மட்டுமல்லாது சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அவதி அடைந்தனர். அதிகாலை முதல் மழை பெய்த போதிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படாததால் மாணவ, மாணவிகள் நனைந்து கொண்டே பள்ளிகளுக்கு சென்றதை காணமுடிந்தது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.