மதுரவாயல் அருகே ரவுடி வெட்டிக்கொலை
மதுரவாயல் அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.;
சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம், கன்னிமாநகர் பகுதியை சேர்ந்தவர் கிழங்கு சரவணன் (வயது 32). பிரபல ரவுடியான இவர் நேற்று இரவு வானகரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் சரவணனை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சரவணன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டது.
இது குறித்து தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார் ரத்தக்காயங்களுடன் மயங்கி கிடந்த சரவணனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சரவணன், மயிலாப்பூரில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்தார். ஏற்கனவே பிரபல ரவுடியான மயிலாப்பூர் சிவகுமாருக்கு எதிராக செயல்பட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. எனவே அதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.