ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் கல்குவாரியை மூட வேண்டும்- கலெக்டரிடம் கிராமமக்கள் கோரிக்கை மனு

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளத்திலுள்ள கல்குவாரியை மூடவேண்டும் என்று கிராமமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்

Update: 2022-05-30 16:25 GMT

தூத்துக்குடி:

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளத்திலுள்ள கல்குவாரியை மூடவேண்டும் என்று கிராமமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குறை தீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்ரன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

ஆம்புலன்ஸ்

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் பங்குத்தந்தை வின்சென்ட், பஞ்சாயத்து தலைவர் காடோடி ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தருவைகுளம் கிராமத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகிறோம். எங்கள் கிராம மக்களின் முதன்மை தொழிலாக கடல் தொழில் விளங்குகிறது. எங்கள் ஊரில் கடல் தொழில் தொடர்பாக அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த விபத்துக்களில் பாதிக்கப்படும் நபர்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல போதுமான ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, எங்கள் ஊருக்கு நிரந்தரமான ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும், என்று கூறி உள்ளனர்.

பழுது நீக்க...

ஸ்ரீவைகுண்டம் சமத்துவபுரத்தில் வசிக்கும் மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஸ்ரீவைகுண்டத்தில் சமத்துவபுரம் 1998-ம் ஆண்டு உருவானது. இங்கு 100 வீடுகள், சமுதாய கூடம், ரேஷன் கடை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த சமத்துவபுரத்தில் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 25 ஆண்டுகளாக இந்த வீடுகள் பழுது பார்க்கப்படவில்லை. இதனால் 100 வீடுகளும் 80 சதவீதம் பழுதடைந்து காணப்படுகின்றன. இதனால் இந்த வீடுகளில் குடும்பத்தோடு இருக்கவே பயமாக உள்ளது. தற்போது சமத்துவ புரம் வீடுகளை பழுதுபார்க்க உள்ளதாக அறிகிறோம். இதில் 30 சதவீதம் வீடுகளை மட்டும் பழுதுபார்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் எங்கள் ஒற்றுமை சீர்குலையும். எனவே, அரசு ஒதுக்கிய நிதியில் 100 வீடுகளையும் பழுது பார்த்து தரவேண்டும். மேலும், தெருவில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். இந்த வீடுகளுக்கு எங்கள் பெயரில் தனிப்பட்டாவும், மின் இணைப்பும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறி உள்ளனர்.

கல்குவாரி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், எங்கள் ஊரில் புதிதாக தொடங்கிய கல்குவாரி, குடியிருப்புகளுக்கு மிக அருகே இருப்பதால் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. கல்குவாரி அதிர்வுகளால் வீடுகளில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்த கல்குவாரியால் விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, அந்த கல்குவாரியை தடை செய்ய வேண்டும். இதே போன்று அந்த பகுதியில் தார் பிளாண்ட் தொடங்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படக்கூடும். ஆகையால் அந்த தார் பிளாண்டையும் தடை செய்ய வேண்டும், என்று கூறி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்