பெண்ணாடம் அருகேசிமெண்டு சாலை பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்தரமற்று அமைப்பதாக குற்றச்சாட்டு

பெண்ணாடம் அருகே சிமெண்டு சாலை பணி தரமற்று அமைப்பதாக கூறி பொதுமக்கள் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-16 18:45 GMT


பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த தாழநல்லூர் கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது, அப்பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.

இதில் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், சாலை தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக கூறி, அங்கு குடியிருக்கும் பழங்குடி இருளர் மக்கள் சாலை பணியை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மணிவிளக்கு பழனிவேல் மற்றும் துணைத் தலைவர் தேன்மொழி பாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, அவர்கள் ஏற்கனவே எங்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் தரம் இல்லாமல் உள்ளது. வீடுகள் கட்டுமான பணியை மேற்கொண்டவர் தான் தற்போது சிமெண்டு சாலை அமைக்கும் பணியையும் செய்து வருகிறார். சாலை அமைக்கும் பணியும் பெயரளவில் நடந்து வருகிறது. எனவே எங்களுக்கு தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் தரமான முறையில் சாலை அமைக்குமாறு ஊராட்சி மன்ற தலைவர் மணிவிளக்கு பழனிவேல் தெரிவித்தார். இதையடுத்து தரமான முறையில் பணிகள் அமைப்பதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டாத்தை விலக்கி கொண்டனர். பின்னர் சாலை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்