சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
கம்பத்தில் சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்
தேனி- குமுளி நெடுஞ்சாலையில் கம்பம் எல்லைப்பகுதியான கோசந்திர ஓடை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து 450 மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது எங்கள் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி செல்வதற்காக பேருந்தில் ஏறுவதற்கு சங்கிலி நகர் பகுதியில் உள்ள தேனி-குமுளி சாலையை கடந்து சென்று வருகின்றனர். சாலையில் தடுப்புச்சுவர் அமைத்தால் சாலையை கடக்க முடியாது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றனர்.
பின்னர் இன்ஸ்பெக்டர் சரவணன் பேசுகையில், இந்த பிரச்சினை குறித்து கலெக்டர் மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையினரை சந்தித்து மனு கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து அந்த பணி நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.