குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்

விழுப்புரம் பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?

Update: 2022-09-27 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே வாணியம்பாளையம் பகுதியில் கடந்த ஓராண்டாக குரங்குகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிந்து சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பயமுறுத்தி வருகிறது.

குறிப்பாக இந்த குரங்குகள் கூட்டம், கடைவீதியில் நடந்துசெல்லும் பொதுமக்களின் உடைமைகள், உணவுப்பைகள் மற்றும் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் கையில் வைத்திருக்கும் உணவுப்பொருட்களையும் பிடுங்கிச்செல்கிறது. கடைகளில் வியாபாரத்திற்காக வைத்திருக்கும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றையும் எடுத்துச்செல்கின்றன. மேலும் குழந்தைகள் கையில் வைத்திருக்கும் திண்பண்டங்களை பிடுங்கி சாப்பிடுவதால் குரங்குகளை பார்த்து குழந்தைகள் மிகவும் அச்சப்படுகின்றனர். அதோடு வீடுகளுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது. மாடியில் காய வைத்திருக்கும் துணிகளையும் கீழே இழுத்துப்போட்டு சேதப்படுத்தி வருவதோடு தண்ணீர் தொட்டிகளில் ஏறி அதன் மூடிகளை உடைத்துபோட்டு அந்த தொட்டிக்குள் குப்பைகளை போடுகிறது. இதனால் குடிநீர் மாசடைந்து வருகிறது. துரத்த முயன்றால் அவை சீறிப் பாய்ந்தபடி கடிக்க வருவதால் பெண்கள், குழந்தைகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதை தாங்க முடியாமல் வாணியம்பாளையம், மழவராயனூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குரங்குகள் கூட்டத்தை பிடிக்க வனத்துறையினருக்கு பலமுறை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே இனிமேலாவது வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு கூண்டுகள் வைத்து குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டுவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்