கலெக்டரின் நேர்முக உதவியாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
வைப்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள வைப்பூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கிராமசபை கூட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜோதி சங்கர் கலந்துகொண்டார்.
கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை, குப்பை கழிவுகள் அகற்றப்படவில்லை என்பது உள்ளிட்ட குறைகளை கோரிக்கையாக முன்வைத்தனர். இதனையடுத்து ஊராட்சி செயலர் தீர்மானங்களை கிராமசபை கூட்டத்தில் வசித்தார். இதனைத் தொடர்ந்து ஊராட்சியில் உள்ள குறைகள் குறித்து பொதுமக்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் கேட்டறிந்தார்.
ஆவேசமடைந்த பொதுமக்கள் வைப்பூர் ஊராட்சியில் 3,4,5,6, ஆகிய வார்டுகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜோதி சங்கர் ஆகியோரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் அடிப்படை வசதிகளை செய்து தர ஊராட்சி நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ள வார்டு உறுப்பினர்கள் தேவையில்லை என கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து விட்டு செல்லப்போவதாக தெரிவித்தனர்.
ஊராட்சியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர முட்டுக்கட்டையாக உள்ள வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாத வார்டு உறுப்பினர்கள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பு அதிகாரி தெரிவித்தார். இது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.