விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை விரட்டி பிடித்த பொதுமக்கள்
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை விரட்டி பிடித்த பொதுமக்கள்
கடத்தூர்
கோபியில் இருந்து பெருந்துறை நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. காமராஜ் என்பவர் பஸ்சை ஓட்டினார். கோவிந்தன் என்பவர் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் பயணிகள் மட்டுமின்றி ஏராளமான மாணவ, மாணவிகளும் பயணம் செய்தனர். மொடச்சூர் அருகே உள்ள வடுகபாளையம் என்ற இடத்தில் சென்றபோது, அப்போது அந்தியூரை நோக்கி சென்ற செங்கல்பாரம் ஏற்றிய லாரி பஸ்சின் பின்பக்கத்தின் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அப்போது பஸ்சுக்குள் இருந்த மாணவ, மாணவிகள் அய்யோ அம்மா என்று அலறினார்கள். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அதை பார்த்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை துரத்தி சென்றனர். சினிமாவில் வருவதுபோல் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று கோபியில் ஒரு சிக்னலை கடந்து செல்லும்போது லாரியை மறித்து நிறுத்தினர். பின்னர் அந்த லாரியை கோபி போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி வரச்சொல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் லாரியை ஓட்டியவர் அந்தியூர் அருகே உள்ள நகலூர் பிரிவை சேர்ந்த ஜெயசூர்யா (வயது 22) என்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.