ஊராட்சி அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வந்த அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை

கரியமாணிக்கத்தில் ஊராட்சி அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வந்த அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரி மீது ஊராட்சி தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

Update: 2022-10-07 19:34 GMT

கொள்ளிடம் டோல்கேட், அக்.8-

கரியமாணிக்கத்தில் ஊராட்சி அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வந்த அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரி மீது ஊராட்சி தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

பொதுமக்கள் முற்றுகை

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நம்பர் 2 கரியமாணிக்கம் ஊராட்சியில் சரியாக குடிநீர் வினியோகம் இல்லாததால், அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட சிலர் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் மனு மீது விசாரணை நடத்துவதற்காக திருச்சி மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதாரணி நம்பர் 2 கரியமாணிக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த பொதுமக்கள், எங்கள் பகுதியில் சரியாக திட்டங்களை செயல்படுத்துவதில்லை. அதற்கு போதிய நிதியை தாங்கள் ஒதுக்கி தருவதில் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்று கூறி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கங்காதாரணியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவரிடம் அவர் விசாரணை நடத்திவிட்டு மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி சென்றதாக கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு

இதுகுறித்து ஊராட்சி தலைவர் கீதா சேகர் நிருபர்களிடம் கூறுகையில், ஊராட்சி பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மைன்ஸ் ராயல்டி மூலம் வந்த நிதியை கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு வார்டு உறுப்பினர்களை அழைத்தால் அவர்கள் வருவதில்லை. எனக்கு ஆகாதவர்கள் சிலர் வார்டு உறுப்பினர்களை என்னுடன் ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட தடுக்கிறார்கள். நான் மக்களுக்காகத்தான் வந்திருக்கிறேன். சாதியை பற்றி பேசுவதற்காக வரவில்லை.

நான் எந்த தவறும் செய்யாத நிலையில் இன்னும் 2 நாட்களில் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சிகளின் உதவி இயக்குனர் தெரிவித்தார். மேலும் அவர், ஊராட்சி மன்றத்திற்கு கிடைக்கப்பெற்ற மைன்ஸ் ராயல்டி நிதி பற்றி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு வராமலும், தீர்மான ஒப்புதல் வாங்க பெறாமலும் தன்னிச்சையாக செயல்பட்டு ரூ.62 லட்சத்துக்கான திட்டப்பணி ஒப்புதலை வழங்கியுள்ளார். இது குறித்து நான் கேட்டபோது, ஒதுக்கப்பட்ட ரூ.62 லட்சத்திற்கான பணிக்கு உடனடியாக தீர்மானத்தை நிறைவேற்றி ஒத்துழைப்பு தருமாறு கட்டாயப்படுத்துகிறார், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்