வாடிப்பட்டி பேரூராட்சியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வாடிப்பட்டி பேரூராட்சியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-06-09 19:14 GMT

வாடிப்பட்டி

வாடிப்பட்டி பேரூராட்சி 18-வது வார்டை சேர்ந்தது மேட்டு நீரேத்தான். இங்கு மேல்நிலை குடிநீர் தேக்கதொட்டி பம்ப் ஆபரேட்டராக அதே பகுதியைச் சேர்ந்த மருது பாண்டியன் என்பவர் பணி செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் வேறு ஒரு வார்டிற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அவரை மீண்டும் 18-வது வார்டில் பணி செய்திட அனுமதிக்க வேண்டி கிராம மக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர். இது சம்பந்தமாக பேரூராட்சி தலைவர் மு.பால்பாண்டியன் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமியிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் வார்டில் 2 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான குடிநீர் வழங்குவதற்கு நாட்டாமைக்கார தெரு. மந்தை, கிழக்கு தெரு பகுதிகளில் 3 மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் தேவை அறிந்து எங்கள் ஊரைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவர் குடிநீர் வினியோகம் செய்து வந்தார். இதுவரை எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு, பற்றாக்குறை இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென்று வாடிப்பட்டி பேரூராட்சியில் உள்ள வேறு ஒரு வார்டுக்கு மருதுபாண்டி மாற்றம் செய்யப்பட்டார். 24 மணி நேரமும் தொடர்ந்து உள்ளூர் மக்களின் நிலை அறிந்து தேவை அறிந்து குடிநீர் வினியோகம் செய்யக்கூடிய மருதுபாண்டியை மீண்டும் குடிநீர் வினியோகம் செய்ய நியமனம் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் சார்பாக வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்