கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
செல்போன் கோபுரம் அமைப்பதை தடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் விராட்டிக்குப்பம் சாலை ஏ.பி.எஸ். நகர், தெய்வநகர், சீரடி சாய்நகர், கிரீன் கார்டன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அப்போது குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட உள்ள செல்போன் கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள், மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதிகளில் நகராட்சி அனுமதி பெறாமல் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இங்கு செல்போன் கோபுரம் அமைந்தால் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பலவித நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைப்பதை மாவட்ட கலெக்டர் தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.